

சென்னை,
தி.மு.க. முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் பெயரை பயன்படுத்தி போக்குவரத்து கழகத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த சீனிவாசன் (வயது 60) சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த பரபரப்பு புகார் மனுவில், 'எனது மகன் என்ஜினீயரிங் பட்டதாரி. அவருக்கு வேலை தேடி கொண்டிருந்தேன். இந்த நிலையில் அரியலூரைச் சேர்ந்த இளஞ்செழியன் (வயது 64) என்பவர் எனக்கு அறிமுகம் ஆனார்.
அவர், போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்த சிவசங்கர் தனக்கு நெருக்கமானவர் என்றும், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் உதவி என்ஜினீயர் வேலையை தன்னால் வாங்கி தர முடியும் என்றும் கூறினார். சிவசங்கரோடு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் என்னிடம் காட்டினார். அதை உண்மை என்று நம்பி எனது மகனுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வேலைவாங்கி தரும்படி அவரிடம் கேட்டுக்கொண்டேன். அவரும் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.27 லட்சம் வாங்கினார்.
ஆனால் சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. இதற்குள் தி.மு.க. ஆட்சி முடிந்துவிட்டது. அமைச்சராக இருந்த சிவசங்கர் பெயரை பயன்படுத்தி ரூ.27 லட்சம் மோசடி செய்த இளஞ்செழியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் அவரை பற்றி திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. இளஞ்செழியன் தான் தி.மு.க.வை சேர்ந்தவர் என்று கூறி வந்துள்ளார். பள்ளிக்கல்வித்துறையில் தான் வேலை பார்ப்பதாகவும் கூறியிருக்கிறார். இளஞ்செழியனை கைது செய்வதற்கு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
நேற்று அவர் ஈரோட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின்னர் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் கூறினார்கள். இளஞ்செழியன் பள்ளிக்கல்வித்துறையில் வேலை பார்ப்பதாக அடையாள அட்டை ஒன்றையும் வைத்திருந்தார். அந்த அடையாள அட்டை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர் உண்மையிலேயே பள்ளிக்கல்வித்துறையில் வேலை பார்க்கிறாரா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது.