

சென்னை,
தேசத்தின் ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் நவீன வளர்ச்சிக்காகத் தன் இன்னுயிரையே தியாகம் செய்த தலைவர் ராஜீவ் காந்தியின் தியாகமும் சிந்தனைகளும் என்றென்றும் நமக்கு வழிகாட்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
21-ஆம் நூற்றாண்டு நவீன இந்தியாவின் சிற்பி, தொலைநோக்குப் பார்வை கொண்ட நமது முன்னாள் பிரதமர், பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் 82-வது பிறந்தநாளில் அவரது ஈடு இணையற்ற தேசப் பணிகளைப் போற்றி எனது மனமார்ந்த மரியாதையையும் புகழஞ்சலியையும் உரித்தாக்குகிறேன்.
"இந்தியா ஒரு பழமையான நாடு, ஆனால் ஓர் இளம் தேசம்; புதிய பாதைகளை அமைத்து, 21-ஆம் நூற்றாண்டில் உலகை வழிநடத்தும் வலிமையான இந்தியாவை நான் கனவு காண்கிறேன்" என்ற தனது வார்த்தைகளை வெறும் பேச்சோடு நிறுத்திவிடாமல், செயலில் காட்டிய மாபெரும் தலைவர் அவர். தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு புரட்சிக்கு வித்திட்டு, இன்றைய டிஜிட்டல் இந்தியாவின் அஸ்திவாரத்தை அமைத்த பெருமை அவரையே சாரும்.
நாட்டின் ஜனநாயகத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பஞ்சாயத்து ராஜ் சட்டம், இளைஞர்களின் குரல் தேசத்தை வழிநடத்த வேண்டும் என்பதற்காக 18 வயதில் வாக்குரிமை, கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த நவோதயா பள்ளிகள் என அவர் கொண்டுவந்த தொலைநோக்குத் திட்டங்கள் இன்றும் இந்தியாவின் முதுகெலும்பாக விளங்குகின்றன. உலகத் தலைவர் நெல்சன் மண்டேலா குறிப்பிட்டது போல, அமைதிக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் உலக அரங்கில் மிக உறுதியாக நின்ற ஒரு உன்னத மனிதர் ராஜீவ். தேசத்தின் ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் நவீன வளர்ச்சிக்காகத் தன் இன்னுயிரையே தியாகம் செய்த தலைவர் ராஜீவ் காந்தியின் தியாகமும் சிந்தனைகளும் என்றென்றும் நமக்கு வழிகாட்டும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.