முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நினைவு நாள்: அன்புமணி மரியாதை

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்துவோம், அவரது ஆசியுடன் இட ஒதுக்கீட்டு உச்சவரம்பை தகர்ப்போம் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நினைவு நாள்: அன்புமணி மரியாதை.
Published on: 

சென்னை,

சமூகநீதிக் காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் 18-ம் ஆண்டு நினைவு நாளான இன்று அவருக்கு புகழ்மரியாதை செலுத்துகிறேன் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் சமூகநீதிப் பயணத்தில் புதிய அத்தியாயத்தை எழுதிய சமூகநீதிக் காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் 18-ம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், அவருக்கு நான் புகழ்மரியாதை செலுத்துகிறேன். அனைத்து மக்களின் சமூக நீதியில் அவர் கொண்டிருந்த அக்கறையை போற்றுகிறேன்.

இட ஒதுக்கீட்டை வழங்கிய மாமனிதர்

நடைமுறைப்படுத்தப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறி கிடப்பில் போடப்பட்டிருந்த மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை தோண்டி எடுத்து, மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக மறுக்கப்பட்டு இட ஒதுக்கீட்டை வழங்கிய மாமனிதர் அவர். இட ஒதுக்கீட்டுக்கான ஆணை பிறப்பித்தது மட்டுமின்றி, அனைத்துத் தடைகளையும் தகர்த்து அந்த இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் போராடியவர்.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு

கொள்கை உறுதியுடன் போராடினால், சமூகநீதியை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் அவர். அவர் தந்த நம்பிக்கைத்தான் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீட்டை மருத்துவர் அய்யா அவர்கள் போராடி பெற்றுத் தர உத்வேகம் அளித்தது. 96 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டு மத்தியிலும், மாநிலத்திலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதை நாம் போராடி சாதிக்க நம்பிக்கை அளித்ததும் அவர் தான்.

முழுமையான சமூகநீதி மலர

இந்தியாவில் முழுமையான சமூகநீதி மலர இட ஒதுக்கீட்டில் 50 சதவீதம் உச்சவரம்பு தகர்க்கப்பட வேண்டும்; அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான் நமது லட்சியம். அந்த லட்சியத்தை வென்றெடுக்க வி.பி.சிங் அவர்களின் நினைவு நாளில் உறுதியேற்போம்!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X