முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவு என தகவல்

சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து எப்போது வேண்டுமானாலும் சிபிசிஐடி போலீஸாரால், ராஜேஷ் தாஸ் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானது.
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவு என தகவல்
Published on

சென்னை,

கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விழுப்புரத்தில் அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்காக வந்த பெண் எஸ்பி ஒருவருக்கு அப்போது சிறப்பு டிஜிபியாக ராஜேஷ் தாஸ் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்ததாக புகார் எழுந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பெண் எஸ்பி புகார் கொடுக்க முயற்சித்தபோது அதனை செங்கல்பட்டு எஸ்பி-யாக இருந்த கண்ணன் தடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விழுப்புரம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் வழக்கு தொடுக்க தாமதப்படுத்தியதற்காக செங்கல்பட்டு எஸ்பி-யான கண்ணனுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

தனக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனையை நிறுத்தி வைக்க கோரி ராஜேஷ் தாஸ் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவர் அப்போது கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அந்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து எப்போது வேண்டுமானாலும் சிபிசிஐடி போலீஸாரால், ராஜேஷ் தாஸ் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானது.

இந்த நிலையில் இன்று அவரை கைது செய்வதற்காக சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு சிபிசிஐடி போலீஸார் சென்றனர். அவர்கள் வருவது தெரிந்ததும் ராஜேஸ் தாஸ் தலைமறைவாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து தலைமறைவான ராஜேஷ் தாஸை கைது செய்ய சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com