தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றம்

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை நடத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்
தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றம்
Published on

சென்னை,

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த வெங்கடாச்சலம் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் கூறப்பட்டது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சென்னை கிண்டி, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் உள்ள வெங்கடாச்சலத்தின் அலுவலகம், சென்னை வேளச்சேரி, புதிய தலைமைச் செயலக காலனி, 2-வது பிரதான சாலையில் உள்ள அவரது வீடு மற்றும் சேலம் அம்மாபாளையத்தில் உள்ள அவரது வீடு மற்றும் உறவினர் வீடுகளிலும் கடந்த செப்டம்பர் மாதம் 23-ந் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். சோதனையில் ரொக்கப்பணம், தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இவர் இந்திய வனப்பணி (ஐ.எப்.எஸ்) அதிகாரியாக தேர்ச்சி பெற்று 1983-ம் ஆண்டு தமிழக வனத்துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திடீர் தற்கொலை-சி.பி.சி.ஐ.டி. விசாரணை

வெங்கடாச்சலம் கடந்த 2-ந் தேதி அன்று சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் திடீரென்றுதூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேளச்சேரி போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். வெங்கடாச்சலத்தின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், வழக்கை சி.பி.ஐ. போலீஸ் விசாரிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால், டி.ஜி.பி.க்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று, வெங்கடாச்சலம் தற்கொலை செய்து கொண்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று உத்தரவிட்டார். வெங்கடாச்சலம் தற்கொலை செய்து கொண்டதன்பின்னணி குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்துவார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com