

சென்னை,
நேற்று நடைபெற்ற மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் 5 முனை போட்டியாக பார்க்கப்பட்டது. இந்த தேர்தலில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த 5 பேரில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜானகிராமனுக்கு மட்டுமே மதுராந்தகம் தொகுதியில் வாக்கு உள்ளது. த.வெ.க வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு திருப்போரூரிலும், தி.மு.க. வேட்பாளர் பரந்தாமனுக்கு எழும்பூரிலும், அ.தி.மு.க. வேட்பாளர் கணிதா சம்பத்துக்கு செங்கல்பட்டிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் சுகந்திக்கு ஸ்ரீவில்லிபுத்தூரிலும் வாக்குகள் உள்ளன.
எனவே நேற்று நடைபெற்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை தவிர மற்ற 4 வேட்பாளர்களும் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மதுராந்தகம் தொகுதியில் இந்த இடைத்தேர்தலில் 86.26 சத வீதவாக்குகள் பதிவாகி இருந்தது. ஆனால் கடந்த பொதுத் தேர்தலில் 93.22 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த பொதுத்தேர்தலைவிட இப்போது 6.96 சதவீத வாக்குகள் குறைந்துள்ளது.