செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பல லட்சம் மோசடி? அஞ்சல்துறை அதிகாரிகள் விசாரணை

நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கடந்த சில நாட்களாக வாடிக்கையாளர்கள் செலுத்திய பணம் அவர்களது கணக்கில் முறையாக வரவு வைக்கப்படவில்லை எனப் புகார் எழுந்தது.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பல லட்சம் மோசடி? அஞ்சல்துறை அதிகாரிகள் விசாரணை
Published on

கன்னியாகுமரி,

பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் 'செல்வமகள் சேமிப்பு திட்டத்தின்' கீழ் ஏராளமான பொதுமக்கள் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் கணக்கு தொடங்கி பணம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக வாடிக்கையாளர்கள் செலுத்திய பணம் அவர்களது கணக்கில் முறையாக வரவு வைக்கப்படவில்லை எனப் புகார் எழுந்தது.

தங்களது கணக்கு புத்தகத்தைச் சரிபார்க்க வந்த சில வாடிக்கையாளர்கள், தாங்கள் செலுத்திய தொகைக்கும் தபால் நிலைய கணினிப் பதிவேட்டில் உள்ள தொகைக்கும் வித்தியாசம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தபால் நிலைய ஊழியர்கள் சிலர், வாடிக்கையாளர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, கணக்கில் ஏற்றாமல் முறைகேடு செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, தபால் துறை கண்காணிப்பாளர் தலைமையிலான அதிகாரிகள் குழு நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் முகாமிட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் செல்வமகள் திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட அனைத்து ரசீதுகளும், கணினிப் பதிவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

சந்தேகத்திற்குரிய பிரிவுகளில் பணியாற்றிய ஊழியர்களிடம் அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பல லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. முழுமையான தணிக்கைக்குப் பின்னரே சரியான தொகை எவ்வளவு என்பது தெரியவரும்.

தபால் நிலையத்தில் பாதுகாப்பாக இருக்கும் என நம்பி சேமித்த பணத்தில் கைவரிசை காட்டப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தபால் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com