

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாத வினியோகம் மீண்டும் தொடங்கியது. கியாஸ் அடுப்புகளுக்கு பதிலாக விறகு அடுப்பு மூலம் லட்டுகளை கோவில் நிர்வாகம் தயாரித்து வினியோகத்தை தொடங்கியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தினமும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் பிரசாதமாக கோவில் நிர்வாகம் சார்பில் இலவசமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது.
சாமி தரிசனம் முடித்து விட்டு வெளியே திருமஞ்சன கோபுர நுழைவு வாயில் வழியாக வரும் பக்தர்களுக்கு இவ்வாறு லட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக லட்டு தயாரிப்பு கூடமும் செயல்பட்டு வருகிறது. அங்கு கியாஸ் அடுப்புகள் நிறுவப்பட்டு லட்டுகளை பணியாளர்கள் தயாரித்து அனுப்புகின்றனர்.
இந்த நிலையில் போர் காரணமாக எல்.பி.ஜி. கியாஸ் வெளிநாடுகளில் இருந்து வருவது குறைந்ததால் அதனை சமாளிக்க வணிக பயன்பாடு சிலிண்டர் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் ஓட்டல்கள், டீக்கடைகள் பல இடங்களில் மூடப்பட்டன. அருணாசலேஸ்வரர் கோவிலுக்கும் கியாஸ் சிலிண்டர்கள் வராததால் லட்டு தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்குவது நிறுத்தப்பட்டது. அதேபோல் கட்டண பிரசாத நிலையத்தில் பிரசாதம் விற்பனை நிலையத்தில் முறுக்கு, எள்ளுவடை, லட்டு, அதிரசம் போன்றவை முற்றிலும் விற்பனை நிறுத்தப்பட்டது. பக்தர்கள் இதனை தொடர்ந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி மாற்று ஏற்பாடாக விறகு அடுப்பு மூலம் லட்டு தயாரித்து வழங்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில் நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு கியாஸ் அடுப்பிற்கு பதிலாக விறகு அடுப்பின் மூலம் லட்டு தயாரித்து வழங்க ஏற்பாடு செய்தது. அதன்படி விறகு அடுப்புகள் மூலம் லட்டுகள் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடந்தது.
பின்னர் நேற்று அதிகாலையில் இருந்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு தடையின்றி மீண்டும் இலவச லட்டு பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.