ஜனவரி முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்: மாணிக்கம் தாகூர் கிண்டல்

பரந்தூர் விமான நிலையம் குறித்து முதல்-அமைச்சர் முடிவு எடுப்பார் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
ஜனவரி முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்: மாணிக்கம் தாகூர் கிண்டல்
Published on

விருதுநகர்,

விருதுநகர் ரெயில்நிலையத்தில் மேம்பாட்டு திட்டப்பணிகள் குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், “விருதுநகர் ரெயில் நிலையத்தை மேம்படுத்த அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ் கடந்த 2023-ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆய்வு செய்த போதும் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் தற்போதும் செல்வம் எம்.எல்.ஏ.வுடன் ஆய்வு மேற்கொண்டேன். இதுவரை ரூ.10 கோடிக்கான பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. அனைத்து பணிகளும் வரும் ஜனவரி மாதத்திற்குள் முடிவடைய வாய்ப்புள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்” என்று கூறினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பரந்தூர் விமான நிலையம் குறித்து முதல்-அமைச்சர் முடிவு எடுப்பார். மின்வாரியத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகள் காங்கிரஸ் மீது கூறிய புகார்கள் சில நியாயமற்றதாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் காங்கிரசிற்கு உண்டு.

ரெயில்வே துறையில் ஆட் குறைப்பு, உஜ்வாலா திட்டத்தில் சிலிண்டர் குறைப்பு ஆகியவற்றை எதிர்த்து போராடுவோம். திமுகவின் அகங்காரம், ஆணவத்திற்கு தான் மக்கள் பதிலடி கொடுத்துள்ளார்கள். ஜனவரி 1-ம் தேதி முதல் ஆர்.எஸ். பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்.. ஆனால் அவருக்கு அரை மீசை நல்லா இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com