

ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பனிக்காலமாகும். கடந்த சில மாதங்களாக சீதோஷ்ண காலநிலை மாறுபாடு காரணமாக நீலகிரியில் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை தாமதமாகவோ அல்லது முன்கூட்டியோ தொடங்குகிறது. இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை.
மேலும் 2 வாரங்களுக்கு முன் தொடங்கிய வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் வெளுத்து வாங்கியது. தற்போது மழை பெய்யவில்லை. நீலகிரியை பொருத்தவரை செப்டம்பர் மாத இறுதி அல்லது அக்டோபர் மாதத்தில் நீர் பனிப்பொழிவும், நவம்பர் மாதத்தில் உறை பனி தாக்கமும் தொடங்குவது வழக்கம். ஆனால், அக்டோபர் மாதத்தில் மழை தொடர்ந்து பெய்ததால் நீர் பனிப்பொழிவு தொடங்க வில்லை.
இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக நீலகிரியில் மழை குறைந்து, பகல் நேரத்தில் வெயில் அடித்து வருகிறது. தற் போது ஊட்டியில் நீர் பனிப்பொழிவு தாமதமாக தொடங்கியுள்ளது. இன்று காலை ஊட்டி நகரில் பெரும்பாலான இடங்களில் நீர் பனிப்பொழிவு காணப்பட்டது. நீர்நிலைகள் அருகே உள்ள புல்வெளி மைதானங்கள், காந்தல் பகுதி, தாவரவியல் பூங்கா, மார்க்கெட் பகுதி, பழைய குதிரை பந்தய மைதானம், அவலாஞ்சி உள்ளிட்ட இடங்களில் நீர் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது.
சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மீது நீர் பனிப்பொழிவு அதிக அளவில் காணப் பட்டது. தாவரவியல் பூங்காவில் உள்ள புல்வெளிகளில் நீர்த்துளிகள் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. ஊட்டி நகரில் புல்வெளிகளில் நடைபயிற்சி செய்தவர்களின் காலணிகள் நீர் பனியால் நனைந்தன.
ஊட்டியில் நீர் பனிப்பொழிவு காரணமாக இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் அதிகாலை நேரத்தில் 14 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், பகல் நேரத்தில் 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு 74 சதவீதம் இருந்தது. கடும் குளிர் காரணமாக மக்கள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.
குன்னூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக காலையில் நீர் பனிப்பொழிவு காணப்படுகிறது. சிம்ஸ் பூங்கா, எடப்பள்ளி, வெலிங்டன், அருவங்காடு போன்ற பகுதிகளில் நீர் பனிப்பொ ழிவு அதிகமாக இருந்தது.
விளையாட்டு மைதானங்களில் உள்ள புல்வெளிகளில் நீர் பனித்துளிகள் கோர்த்து இருப்பதால், நடைபயிற்சி மேற்கொள் பவர்கள், விளையாட்டு வீரர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். நீலகிரியில் இந்த ஆண்டு உறை பனி தாக்கம் விரைவில் தொடங்கும் என்றும், அதிகமாக இருக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.