சட்டக் கல்வி இயக்ககத்திற்கு முழுநேர இயக்குநர்: பணிமூப்பு அடிப்படையில் உடனே நியமிக்க எஸ்டிபிஐ வலியுறுத்தல்

புதிய நடைமுறைகளை காரணம் காட்டுவதும் சட்டத்தின் ஆட்சிக்கும் சமூக நீதிக்கும் உகந்ததல்ல.
சட்டக் கல்வி இயக்ககத்திற்கு முழுநேர இயக்குநர்: பணிமூப்பு அடிப்படையில் உடனே நியமிக்க எஸ்டிபிஐ வலியுறுத்தல்!
எஸ்டிபிஐ
Published on: 

சென்னை,

சட்டக் கல்வி இயக்ககத்திற்குப் பணிமூப்பு அடிப்படையில் முழுநேர இயக்குநரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல். இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஏ.கே.கரீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நிர்வாக சிக்கல்

தமிழ்நாட்டின் சட்டக் கல்வியை முறைப்படுத்தி, ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் உருவாக்கும் உன்னத பொறுப்பை கொண்ட சட்டக் கல்வி இயக்ககத்தின் தலைமை பொறுப்பு, நீண்டகாலமாக உரிய முறையில் நிரப்பப்படாமல் இருப்பது நிர்வாக சிக்கல்களுக்கு வழிவகுத்துள்ளது.

பணிமூப்பு பட்டியல்

வேலூர் அரசு சட்ட கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் பணிமூப்பு பட்டியலில் முன்னணியில் உள்ள நிலையில் அவரை பொறுப்புக்கு நியமிக்காமல், அதற்கடுத்த பணி மூப்பு நிலையில் உள்ளவருக்கு தற்காலிக பொறுப்புகள் வழங்கப்படுவதும், அதில் நீதிமன்ற தலையீடுகள் ஏற்படுவதும் சட்டக் கல்வி நிர்வாகத்தில் தேக்கநிலையை உருவாக்கியுள்ளது.

இடைக்கால தடை

சிறப்பு விதிகளின்படி இரு மாதங்களில் முழுநேர இயக்குநர் நியமிக்கப்படுவார் என்று ஐகோர்டில் உறுதியளிக்கப்பட்ட போதிலும், அவசரகால விதியான பிரிவு 47(1)-ஐப் பயன்படுத்தி மீண்டும் தற்காலிக நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதை ஐகோர்ட்டு கண்டித்து இடைக்கால தடை விதித்ததும், அதை தொடர்ந்து அரசாணை திரும்ப பெறப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.

பாரம்பரிய நடைமுறை

எனவே, கடந்த 73 ஆண்டுகால பாரம்பரிய நடைமுறைகளை பின்பற்றி, சிறப்பு விதி 2(a)-இன்படி பணிமூப்பு பட்டியலில் முதலிடத்தில் உள்ள பட்டியல் சமூகத்தை சேர்ந்த ராஜேஸ்வரனை உடனடியாக சட்டக்கல்வி இயக்குநராக நியமித்து சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது.

காலதாமதம்

பணிமூப்பில் மூத்த அதிகாரியை நியமிப்பதில் காலதாமதம் செய்வதும், புதிய நடைமுறைகளை காரணம் காட்டுவதும் சட்டத்தின் ஆட்சிக்கும் சமூக நீதிக்கும் உகந்ததல்ல. நீண்டகாலமாக இயக்குநர் இன்றி இயங்கும் அரசு சட்ட கல்லூரிகளின் நிர்வாகத்தையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, அரசு வெளிப்படையான, தகுதியின் அடிப்படையிலான முழுநேர நியமனத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

X