

சென்னை,
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தலைமையில், சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை சிறப்பாக மேற்கொள்ளுதல் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:-
இன்று (30.10.2026) நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தலைமையில், சென்னை மாநகராட்சியில் திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே மக்கும் கழிவுகள், மக்காத கழிவுகள், சுகாதாரக் கழிவுகள், அபாயகரமான கழிவுகள் ஆகியவற்றை பொதுமக்கள் தனித்தனியே பிரித்து வழங்குதலை உறுதிப்படுத்துதல், பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் கழிவுகளை அகற்றுதல் (Bio Mining), குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளுதல் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பேசும்போது தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, திடக்கழிவு மேலாண்மை பணிகளை சென்னை மாநகராட்சி பகுதிகளில் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன்படி வீடுகளில் உருவாகும் திடக்கழிவுகளை அவை உருவாகும் இடத்திலேயே பொதுமக்கள் மக்கும் கழிவுகள், மக்காத கழிவுகள், சுகாதாரக் கழிவுகள், அபாயகர கழிவுகள் என தனித்தனியே பிரித்து சேகரித்து, அதனை வீடுகளுக்கு திடக்கழிவுகள் சேகரிக்க வருகைதரும் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
வீடுகளில் திடக்கழிவுகளை சேகரிக்கும் தூய்மைப் பணியாளர்கள் அவற்றை வாகனங்களில் 4 வண்ண குப்பை தொட்டிகளை வைத்து பிரித்து சேகரிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை ஆணையாளர், இணை/துணை ஆணையாளர்கள், வட்டார துணை ஆணையாளர்கள், மண்டல அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும்.
சென்னை தூய்மையாக திகழ்கின்ற வகையில் தூய்மை பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பேருந்து நிறுத்தங்கள், மயானபூமிகள், குடிசை பகுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இயந்திரங்கள் மூலம் சாலைகளில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகளை தொடர்ந்து கண்காணித்து சாலைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் மீட்டெக்கும் பணியினை துரிதப்படுத்தி முடித்திட வேண்டும். மீட்டெடுக்கப்பட்டுள்ள இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்திட வேண்டும். இப்பணியினை தொடர்ச்சியாக கண்காணித்து உறுதி செய்திட வேண்டும்.
பெருமளவு திடக்கழிவு உற்பத்தி செய்பவர்கள் கழிவுகளை தொடக்க நிலைகளிலேயே தரம் பிரித்து வைத்து, அவற்றை சென்னை மாநகராட்சி அல்லது சென்னை மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட முகமை / நிறுவனத்திடம் ஒப்படைத்திட வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது உரிய அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
விளம்பர பேனர்கள் மற்றும் சுவரொட்டிகள் இல்லாத சென்னையாக உருவாக்கும் வகையில், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனுமதிக்கப்பட்ட விளம்பர பேனர்களின் உறுதி தன்மையை உறுதி செய்யவும், அனுமதிக்கப்படாத விளம்பர பேனர்களை உடனடியாக அகற்றிடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உரிய கட்டணம் செலுத்தப்படாத விளம்பர பேனர்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு கட்டணம் வசூலிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கட்டணம் செலுத்தாத பேனர்களை உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை தவிர்ப்பதற்கு விற்பனை கடைகளில் களஆய்வுகள் மேற்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், தொடர்ந்து கண்காணித்திடவும், பொதுமக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் வேண்டும்.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அதிகளவில் மரக்கன்றுகள் மற்றும் செடிகளை நட்டு வளர்த்திட வேண்டும். சோழிங்கநல்லூர், மாதவரம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் உயிரி எரிவாயு உற்பத்தி ஆலைகளின் கட்டுமான பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.
கணேசபுரம் மேம்பாலத்தின் கட்டுமானப் பணியினையும், இப்பகுதியில் தேங்கும் மழைநீரை சேகரிப்பதற்கான 2 நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கும் பணியினையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள், பள்ளிக் கட்டடங்கள், பூங்காக்கள், கால்நடை காப்பகங்கள் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.
சென்னை மாநகராட்சியில் தெருநாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்வதோடு, அனைத்து நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். சென்னை மாநகராட்சியில் 13 கால்நடை காப்பகங்கள் கட்டப்பட்டு, கால்நடைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரியாத வகையில் கால்நடைகளின் உரிமையாளர்களிடம் கால்நடைகளை காப்பகங்களில் வைத்துப் பராமரிப்பதற்கு அறிவுறுத்த வேண்டும்.
இதனை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நடைபெற்று வரும் 4 கால்நடை காப்பகங்கள் கட்டும் பணியினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் சமீரன், இணை ஆணையாளர்கள் செ.சரவணன், (பணிகள்), க.கற்பகம், (கல்வி), துணை ஆணையாளர் (சுகாதாரம்) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மற்றும் வட்டார துணை ஆணையாளர்கள், தலைமை பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.