விநாயகர் சதுர்த்தி விடுமுறை; ஆம்னி பஸ்களின் கட்டணம் இரண்டு மடங்கு அதிகரிப்பு

சென்னையிலிருந்து திருச்சி செல்ல அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது
விநாயகர் சதுர்த்தி விடுமுறை; ஆம்னி பஸ்களின் கட்டணம் இரண்டு மடங்கு அதிகரிப்பு
Published on

சென்னை,

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களில் கல்வி, பணி நிமித்தமாக தங்கி இருப்பவர்கள் விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் நாளை மறுநாள் (27-ந்தேதி) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இது ஒரு நாள் விடுமுறையாக இருந்தாலும், மேலும் 2 நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊர்களுக்கு பயணிக்க ஐ.டி. நிறுவன ஊழியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தயாராகிவிட்டனர்.

இதைப் பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையிலிருந்து திருச்சி செல்ல அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பஸ் உரிமையாளர்களின் விலைப்பட்டியலின்படி, இருக்கையில் பயணிக்க அதிகபட்சமாக ரூ.1,320 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதிகபட்சமாக ரூ.3 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.

இதேபோல், அதிநவீன சொகுசு பஸ்களில் படுக்கையில் பயணிக்க ரூ.1,840 வசூலிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், ரூ.4 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள் சென்னையிலிருந்து திருச்சி செல்லவும், மீண்டும் ஞாயிற்றுக்கிழமை (31-ந்தேதி) திருச்சியிலிருந்து சென்னை செல்லவும் இதே அளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களுக்கும் இதில் குறைவில்லாத வகையில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-

தொடர் விடுமுறை நாட்களில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. படுக்கை வசதி கொண்ட பஸ்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் குறித்து 1800 425 6151 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com