சென்னையில் 2 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படாது - தமிழக அரசு அறிவிப்பு

அடுத்தாண்டு முதல் நீலாங்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் சிலைகள் கரைக்கப்படமாட்டாது என்று அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
 தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு
Published on

சென்னை,

பட்டினப்பாக்கம், நீலாங்கரை கடற்கரைகளில் அடுத்தாண்டு முதல் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்படாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் , அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் கடந்த 2023-ம் ஆண்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பட்டினப்பாக்கம், நீலாங்கரை கடற்கரைகளில் சிலைகளை கரைக்க அனுமதிக்க இயலாது என்றும், இந்த 2 இடங்களிலும் கரைக்கப்படும் சிலைகளை மற்ற 4 இடங்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து, செப்.16-ம் தேதி தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் பிரசாந்த் கார்கவா தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில்,

"நீலாங்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் கரைக்கப்படவுள்ள சிலைகளை, மற்ற 4 பகுதிகளுக்கு அனுப்புவதில், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், பாலவாக்கம் கடற்கரையில் கரைக்கவுள்ள 450 சிலைகளை கோவளத்துக்கும், பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கவுள்ள 250 சிலைகளை எண்ணூருக்கும் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது.

அப்போது குறுக்கிட்ட தீர்ப்பாய நடுவர், விநாயகர் சிலைகள் கரைப்பது தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பித்து மூன்றாண்டுகள் கடந்து விட்டன, கடந்தாண்டு விநாயகர் சதுர்த்தி முடிந்தபிறகு, நடப்பாண்டு சிலைகளைக் கரைப்பதற்காக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது, அதில்,

அடுத்தாண்டு முதல் நீலாங்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் சிலைகள் கரைக்க அனுமதி அளிக்கப்படமாட்டாது என்று அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு பிரமாணப்பத்திரத்தை நாளை (செப்.17) தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com