பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை: முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் கைது- கார், பணம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணாநகர் பகுதியில் கடந்த வாரம் பூட்டியிருந்த சில வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.
பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை: முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் கைது- கார், பணம் பறிமுதல்
Published on

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணாநகர் பகுதியில் கடந்த வாரம் பூட்டியிருந்த சில வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் போலீசார் ஆய்வு செய்த போது முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் இந்த காள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிந்தது. தொடர் விசாரணையில் அவர்கள், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கைலாச ஊரணி தெருவை சேர்ந்த முருகேசன் மகன் சிவக்குமார் (வயது 28), ஸ்ரீவில்லிபுத்தூர் முனியசாமி மகன் சாந்தகுமார்(33) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

மேலும் இந்த 2 பேரும் முகமூடி அணிந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும், அந்த மாவட்ட போலீசார் அவர்களை தேடிவருவதும் தெரிய வந்தது. இவர்களை தனிப்படை போலீசார் பிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 17ம் தேதி கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் அருகே தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. அந்தக் காரை போலீசார் சிறிது தூரம் துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர். அந்த காரில் இருந்த சிவக்குமார், சாந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கார் மற்றும் ரூ.20 ஆயிரத்தை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com