தோட்டம் அமைக்கும் பணி

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்க தோட்டம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தோட்டம் அமைக்கும் பணி
Published on

தொண்டி, 

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்க தோட்டம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

ஆய்வு

திருவாடானை யூனியன் மங்கலக்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின்கீழ் முருங்கை தோட்டம் அமைக்கும் பணி தீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் மேகலா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ், ஊராட்சித் தலைவர் அப்துல் ஹக்கீம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து ஊராட்சித் தலைவர் அப்துல் ஹக்கீம் கூறியதாவது:- மங்கலக்குடி ஊராட்சியில் ஏற்கனவே காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு அதில் விளையும் காய்கறிகள் தினமும் ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைவான கர்ப்பிணி பெண்கள், வளர் இளம்பெண்கள் மற்றும் அங்கன்வாடி மையம் சத்துணவு மையங்களில் உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கும் வழங்கி வருகிறோம்.

முருங்கை தோட்டம்

இதனால் இந்த ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் தற்போது 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் மூலம் முருங்கை நாற்றங் கால் பண்ணை அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் முருங்கை தோட்டம் அமைக்கப்பட உள்ளது.

இதில் கிடைக்கும் முருங்கை கீரை மற்றும் காய்களை ஊராட்சியில் உள்ள கர்ப்பிணி பெண்கள், வளர் இளம் பருவத்தினர் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும் இலவசமாக வழங்க உள்ளோம் என்று கூறினார்.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மேகலா கூறிய தாவது:- திருவாடானை யூனியனில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் மங்களக்குடி உள்பட சுமார் 15 கிராம ஊராட்சிகளில் முருங்கை நாற்றங்கால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஊட்டச்சத்து குறைபாடு

மேலும் ஊராட்சிகளில் முருங்கை தோட்டங்கள் உருவாக்கப் படுவதற்கு வேலிகள் அமைக்கும் பணி 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஊராட்சிகளில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு உடைய கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வளர் இளம் பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு இரும்புச்சத்து அதிகம் உள்ள முருங்கைக்கீரை, காய்கள் இலவசமாக கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com