

சென்னை,
"அடுத்த ஜி.டி. நாயுடு யார்?" - இது தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் மாணவர்களுக்கான Innovation போட்டியாகும். இந்தியாவின் எடிசன் என்று புகழப்படும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு மாதவன் நடிப்பில் ஜி.டி.என் படம் வெளியாக இருக்கிறது. ஜி.டி.நாயுடுவைக் கொண்டாடும் வகையில் படத்தின் தயாரிப்பாளர்கள், தந்தி குழுமத்துடன் (Thanthi Media) இணைந்து இந்த போட்டியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இதற்கான பதிவு 2026 ஜூன் 11-ம் தேதியான இன்று தொடங்குகிறது. ஜூலை மாதம் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் வெளியீட்டுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, ஜூலை 3-ம் தேதி சென்னையில் இதன் இறுதிப் போட்டி நடைபெறும்.
தமிழ்நாட்டில் உள்ள AICTE அங்கீகாரம் பெற்ற அனைத்து பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம். 120-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இதில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.டி. நாயுடுவின் வாழ்நாள் பணிகளிலிருந்து பெறப்பட்ட ஐந்து முக்கிய கருப்பொருள்களின் அடிப்படையில் (உள்நாட்டு உற்பத்தி, சிறு விவசாயிகளுக்கான வேளாண் தொழில்நுட்பம், நீர் மற்றும் சுகாதாரம், மலிவு விலை போக்குவரத்து மற்றும் கிராமப்புற இந்தியாவுக்கான சிக்கனமான பொறியியல் தீர்வுகள்), நிஜ உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான செயல்முறை மாதிரிகளை (prototypes) மாணவர்கள் உருவாக்க வேண்டும். ஒரு பேராசிரியர் வழிகாட்டி உதவியுடன், அதிகபட்சம் நான்கு மாணவர்கள் கொண்ட குழுக்களாக இதில் பங்கேற்கலாம்.
மொத்த பரிசுத் தொகை ₹10 லட்சம் ஆகும். முதல் பரிசாக ₹5 லட்சம் ரொக்கமும், இரண்டாம் பரிசாக ₹2 லட்சம் ரொக்கமும் வழங்கப்படும்; மூன்றாவது பரிசாக ₹1,250,00 ரொக்கமும் நான்காவது மற்றும் ஐந்தாவது பரிசாக முறையே ₹.50,000, ₹25,000 ரொக்கமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும். இறுதிச் சுற்றுக்கு மொத்தம் 24 அணிகள் தேர்வு செய்யப்படும். இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகும் இருபத்து நான்கு அணிகளுக்கும், பாட்னர்ஷிப் நிறுவனம் ஒன்றின் மூலம் ஓராண்டு கால தொழில்முனைவோர் வழிகாட்டுதல் பயிற்சி (Incubation Training) பெறும் வாய்ப்பு வழங்கப்படும். ஜூலை 3-ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும். இவ்விழாவில் நடிகரும் இயக்குநருமான ஆர். மாதவன், தந்தி குழுமம், ஜி.டி. நாயுடு அறக்கட்டளைகள் மற்றும் தொழில் துறைத் தலைவர்களின் மூத்த பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள்.
போட்டியின் தொடக்க விழாவில் பேசிய ஆர். மாதவன், இத்திரைப்படத்தின் உள்ளடக்கத்தில் உள்ள உணர்வில் இருந்தே இந்தப் போட்டி உருவானது என்று கூறினார். ``ஜி.டி. நாயுடு வாழ்க்கை குறித்து நாங்கள் ஆய்வு செய்யத் தொடங்கியபோது, அவர் உருவாக்கிய விஷயங்கள் மட்டுமல்ல, அவற்றை அவர் உருவாக்கிய விதமும் எங்களை வெகுவாகக் கவர்ந்தது. மிகக் குறைந்த வளங்களைக் கொண்டு, பெரும்பான்மை மக்கள் படும் இன்னல்களுக்கு அவர் தீர்வுகளை உருவாக்கினார். அந்தப் பாரம்பரியத்தை, அது இன்றும் உயிர்ப்புடன் திகழும் இடமான தமிழ்நாட்டின் பொறியியல் கல்லூரிகளுக்கே சென்று கௌரவிக்க விரும்பினோம். இந்தப் போட்டியிலிருந்து ஒரு குழுவாவது அடுத்த 'ஜி.டிநாயுடு'வாக உருவெடுத்தால், படத்தை எடுத்ததற்கான உண்மையான நோக்கம் நிறைவேறியதாகும்’ என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.
மொத்த பரிசுத் தொகை ₹10 லட்சம் ஆகும். முதல் பரிசாக ₹5 லட்சம் ரொக்கமும், இரண்டாம் பரிசாக ₹2 லட்சம் ரொக்கமும் வழங்கப்படும்.
போட்டி நடத்தும் குழு
இந்த போட்டி மூன்று சுற்றுகளாக நடத்தப்படும். அனைத்துப் பதிவுகளும் முதலில் கல்வியாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் அடங்கிய நடுவர் குழுவால் டிஜிட்டல் முறையில் பரிசீலிக்கப்படும். அதில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் 36 குழுக்கள், ஜூன் 29-ம் தேதி தினத்தந்தியின் 12 கிளைகள் அமைந்துள்ள நகரங்களில் நடைபெறும் மாவட்ட அளவிலான தகுதிச் சுற்றுகளில் பங்கேற்கும். ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்வாகும் இரண்டு இறுதிப் போட்டியாளர்கள், ஜூலை 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்பார்கள்; பரிசளிப்பு விழா ஜூலை 3-ம் தேதி நடைபெறும்.
மாணவர்கள் பதிவு செய்வது இலவசம். போட்டியாளர்கள் பதிவு செய்துகொள்வதற்கான இறுதி நாள் ஜூன் 21, 2026 ஆகும். போட்டியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம்; அதற்கான இணைப்பு இன்று முதல் 'தினத்தந்தி' மற்றும் தந்தி குழுமத்தின் டிஜிட்டல் தளங்களில் வெளியிடப்படும்.
நடிகர் - இயக்குநர் மாதவனைப் பொறுத்தவரை, இந்த போட்டி நடைபெறும் இந்த சூழல் மனதுக்கு நெருக்கமானதானவும் பொருள்பொதிந்ததாகவும் பார்க்கிறார். `கோவையின் ஆகச்சிறந்த செல்வத்தை உருவாக்கியவர் ஜி.டி.நாயுடு. எதிர்கால சந்ததியினர் தன்னை நினைவுகூர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்று அவர் எப்போதும் எண்ணியதில்லை. இந்தத் தலைமுறையினர் அவரை நினைவுகூர வேண்டும் என்று நாம் கேட்கவில்லை. மாறாக, அவராகவே மாறுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்’ என்று நெகிழ்ந்திருக்கிறார் மாதவன்.
இப்போதே பதிவு செய்யுங்கள்: https://events-dailythanthi.com/gdn/registration/