ஜெம் வீரமணி வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரி அருணை விசாரிக்க கோரி மனு

ஜெம் வீரமணி வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி அருண் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜெம் வீரமணி வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரி அருணை விசாரிக்க கோரி மனு
Published on: 

சென்னை,

தொழில் அதிபர் 'ஜெம்' கிரானைட் வீரமணி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு கடந்த 2025-ம் ஆண்டே பதிவு செய்யப்பட்டதாகவும். அதுபற்றி முறையாக விசாரணை நடத்தாமல் வழக்கை போக்சோ சிறப்பு கோர்ட்டில் முடித்து வைத்து விட்டதாகவும், புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சித்குமாரும் பரபரப்பு பேட்டி கொடுத்தார். இதில் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் அருண் மீதும், அப்போதைய தென்சென்னை கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன் மீதும் புகார் எழுந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து கூடுதல் டி.ஜி.பி. அருண் மீதும், ஐ.ஜி. டாக்டர் கண்ணன் மீதும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. இந்த நிலையில் அவர்கள் 2 பேரையும் நேரில் ஆஜராகும்படி சிறப்பு புலனாய்வு படை போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அந்த சம்மனை ஏற்று, கடந்த 12-ம் தேதி இருவரும் சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் சிறப்பு புலனாய்வு படை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகினர்.

அவர்களிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் இருவரிடமும் தலா 80 கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கு அவர்கள் அளித்த பதில்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இவர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தியதையொட்டி இவ்வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டது. இது தமிழக போலீஸ் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஜெம் வீரமணி வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி அருண் மீதான புகாரை விரைந்து விசாரிக்க கோரி வாராகி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கை முடித்து வைக்க ஐபிஎஸ் அதிகாரி அருண் ரூ.24 கோடிக்கு தங்கத்தை லஞ்சமாக வாங்கியதாகவும், சொத்துக்கள் கைமாறியது குறித்து விசாரிக்கவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com