5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
Published on

சென்னை,

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவ மாணவிகளையும் கட்டாயம் தேர்ச்சி செய்ய வேண்டும் என்ற முறை அமலில் இருந்து வந்தது. இதன் காரணமாக எப்படியும் தேர்ச்சி பெறலாம் என்பதால் மாணவர்கள், படிப்பில் முழுக்கவனத்தையும் செலுத்துவதில்லை என்றும் மேலும் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும் மத்திய அரசு கூறி வந்தது.

அதற்காக இலவச மற்றும் கட்டாய கல்வி திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. மேலும் மத்திய அரசின் முடிவை மசோதாவாகவும் தாக்கல் செய்தனர். இந்த நடைமுறையினை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

இதனையடுத்து கட்டாய தேர்ச்சி என்பதால் மாணவர்கள் அதிகபட்சமாக 8-ம் வகுப்பு வரையும் படிப்பார்கள், இல்லையெனில், மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுவார்கள் என்றும் கூறப்பட்டது. மேலும் இந்த புதிய முறைக்கு தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த முறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பரிசீலனை செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதனிடையே மத்திய அரசின் அறிவுறுத்தல்படி தமிழகத்தில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டே நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் அறிவித்தது.

இந்நிலையில், 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, 5-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 15ந் தேதி தொடங்கி, ஏப்ரல் 20ந் தேதி வரை நடைபெறும். இதேபோன்று 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 30ந் தேதி தொடங்கி, ஏப்ரல் 17ந் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com