

சென்னை,
பிரபஞ்சத்தில் உயிரினங்கள் வாழக்கூடிய சூழல் உள்ளதா என்ற ஆராய்ச்சியில் செவ்வாய் கிரகம் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில், செவ்வாய் கிரகத்தின் புவியியல், வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளுடன் ஒத்துப்போகக்கூடிய அரிய நிலப்பரப்புகள் தமிழ்நாட்டின் நெய்வேலி மற்றும் திருச்சி பகுதிகளில் இருப்பதை இந்திய விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்து சாதனை படைத்துள்ளனர்.
இதேபோன்ற ஒரு பகுதி தென் அமெரிக்க நாடான சிலியின் அட்டகாமா பாலைவனத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும், சிலியின் அட்டகாமா பாலைவனத்திலும் இரண்டு முக்கிய கனிம வகைகள் கண்டறியப்பட்டன. செவ்வாய் கிரகத்துடன் புவியியல், வேதியியல் மற்றும் இயற்பியல் ரீதியான ஒற்றுமைகளை பிரதிபலிப்பதால், அப்பகுதிகள் செவ்வாய் கிரகத்திற்கு நிகரான புவியியல் பகுதிகளாக இருக்கலாம் என்பதை நிரூபிக்க இவை உதவியுள்ளன.
கிரகங்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த காலகட்டத்தில், புவிசார் ஒற்றுமை கொண்ட தளங்களை கண்டறிவது ஒரு முக்கியமாக மாறியுள்ளது. சுற்றுப்பாதை சார்ந்த தரவுகளால் மட்டும் செவ்வாய் கிரகத்தில் உள்ள கனிமங்களை முழுமையாக வகைப்படுத்த முடியாது என்பதை அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இந்த ஆய்வுகளுக்கு துல்லியம் வாய்ந்த, அதிநவீன பகுப்பாய்வு கருவிகள் அவசியமாகிறது.
கேரள பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் உள்ள அறிவியல் தொழில்நுட்பத் துறை - அறிவியல் தொழிலுட்ப மேம்பாட்டு நிதியத்தின் உதவியுடன் செயல்படும் லேசர் ராமன் நிறமாலைமானி உள்ளிட்ட மேம்பட்ட கருவிகள், தமிழ்நாட்டின் நெய்வேலியில் மெலன்டரைட்டையும், சிலியின் அட்டகாமா பாலைவனம் மற்றும் தமிழ்நாட்டின் பாதியளவு வறண்ட புவியியல் மற்றும் பழங்கால பருவநிலை பகுதியான திருச்சிராப்பள்ளி அருகே உள்ள தரிசு நிலங்களில் ஜிப்சத்தையும் கண்டறிய உதவியுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.