

சிவகங்கை மாவட்டம் கமுதியைச் சேர்ந்த மலையரசன் என்பவர், பொத்தேரி பகுதியில் கிளவுட் கிச்சன் நடத்தி வருகிறார். இவர் தனது சொந்த ஊரான கமுதிக்குச் சென்றுவிட்டு, நள்ளிரவு 12 மணியளவில் குடும்பத்துடன் மீண்டும் சென்னையில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது, தனது 12 வயது மகள் ரிஷிகாவை காரில் அமர வைத்துவிட்டு, அவரும் அவரது மனைவியும் கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள கடைக்குச் சென்று உணவு சாப்பிட்டுள்ளனர். அந்த நேரத்தில் காரை இயக்கிய நிலையில் விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனை நோட்டமிட்ட நபர், காரைத் திருடிச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
உணவு சாப்பிட்டுவிட்டு பெற்றோர் திரும்பி வந்து பார்த்தபோது, காரையும் அதிலிருந்த சிறுமியையும் காணவில்லை. இதையடுத்து, கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், இரவோடு இரவாகத் தனிப்படைகள் அமைத்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை செய்தனர். தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், சிறுமியை சீர்காழி அருகே போலீசார் மீட்டுள்ளனர். சிறுமியுடன் காரை கடத்திய நபர் தப்பி ஓடியுள்ளார்.
அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காரில் சிறுமி இருப்பது தெரியாமல் காரை மர்ம நபர் கடத்தி சென்றாரா? அல்லது சிறுமியை கடத்தும் நோக்கில் சென்றாரா? என்பது மர்ம நபர் பிடிபட்ட பிறகே தெரியும். காருடன் சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.