தண்ணீர் லாரி மோதி சிறுமி பலி: கட்டுப்பாடுகளை கடுமையாக்க போலீஸ் கமிஷனர் உத்தரவு


தண்ணீர் லாரி மோதி சிறுமி பலி: கட்டுப்பாடுகளை கடுமையாக்க போலீஸ் கமிஷனர் உத்தரவு
x

இந்த சம்பவம் தொடர்பாக, விபத்து நடந்த பகுதியை சேர்ந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை பேப்பர் மில்ஸ் சாலையில் தண்ணீர் லாரி மோதி சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தையொட்டி போக்குவரத்து போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் அருண் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக, விபத்து நடந்த பகுதியை சேர்ந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலை மணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அந்த பகுதி போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் சத்யமூர்த்தி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகருக்குள் தண்ணீர் லாரி போன்ற கனரக வாகனங்களை காலை 6 மணிக்கு மேல் அனுமதிக்க கூடாது என்பது ஒரு விதியாக அமலில் உள்ளது. அந்த விதியை மீறி தண்ணீர் லாரி சென்னை நகருக்குள் அனுமதிக்கப்பட்டதால்தான் சிறுமியின் உயிர்பலி சம்பவம் நடந்துவிட்டது.

எனவே, தண்ணீர் லாரி விசயத்தில் விதிமுறைகளை போக்குவரத்து போலீசார் கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், இதை கடைபிடிக்காத போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்தினால் உயிர்பலிக்கு காரணமாகும் வாகனங்களை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும். அந்த வாகனங்களை 100 நாட்களுக்கு பிறகுதான் விடுவிக்க வேண்டும் என்பதும் ஒரு விதியாக உள்ளது.

அந்த விதியையும் இனிமேல் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் போக்குவரத்து போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. சிறுமி பலியான விபத்துக்கு காரணமான தண்ணீர் லாரியின் டிரைவர் பார்த்தசாரதியின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்து துறைக்கு பரிந்துறை செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக விபத்து தொடர்பாக தண்ணீர் லாரியின் டிரைவர் பார்த்தசாரதி கைது செய்யப்பட்டார்.

1 More update

Next Story