கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் தப்பிய சிறுமி குரூப்-1 தேர்வில் சாதனை: விரைவில் துணை கலெக்டராக பதவியேற்க உள்ளார்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 15-ஆம் இடம் பிடித்து ஜெனிபர் சாதனை படைத்துள்ளார்.
ஜெனிபர்
Published on

கும்பகோணம்,

கும்பகோணத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி காசிராமன் தெரு ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அத்துடன் 19 குழந்தைகள் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆண்டுதோறும் இறந்த குழந்தைகளின் நினைவு தினம் ஜூலை 16-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட கலெக்டர்

இந்த விபத்து நிகழ்ந்த பள்ளியில் சிறுமி ஜெனிபர் 4-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். விபத்து நடந்த நேரத்தில் பள்ளியின் மேல் தளத்தில் இருந்து தரைத்தளத்திற்கு வந்ததால், இந்த தீ விபத்தில் இருந்து தம்பியுடன் உயிர் தப்பினார். ஆனாலும் பலர் அந்த தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஜெனிபர் மனதில் பெரும் வலியை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து அவர் மேற்கொண்ட மீட்பு பணிகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர் ஆற்றிய ஆறுதல் மற்றும் உடனடி உதவிகள் ஆகியவை ஜெனிபரின் மனதில் ஆழமாக பதிந்தன, இந்த சம்பவம் அவர் மனதில் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை உருவாக்கியது.

15-ஆம் இடம்

கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு வரை படித்தார். தங்கள் குடும்ப சூழ்நிலையின் காரணமாக தனியார் பயிற்சி மையத்தில் சேர முடியாத நிலையில், வீட்டிலிருந்தபடியே பள்ளி குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்தும், தன் தாய் சுஜாதாவின் உதவியுடனும், சில ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு, டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 15-ஆம் இடம் பிடித்து ஜெனிபர் சாதனை படைத்துள்ளார். மேலும் துணை கலெக்டராக பதவியேற்க தயாராகியிருக்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com