

சென்னை,
கோவாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த 24 மாணவ, மாணவிகள் அனைத்து பிரிவிகளிலும் வெற்றி பெற்று தங்கம் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரியத்துடன் பின்னிப் பிணைந்துள்ள சிலம்பக்கலை பல நூற்றாண்டுகளாக தற்காப்புக் கலையாகவும், உடற்பயிற்சியாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் கிராமப்புறங்களில் மட்டுமே அதிகம் காணப்பட்ட சிலம்ப பயிற்சி தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையேயும் வரவேற்பை பெற்றுள்ளது.
உள்ளூர் போட்டிகள் தொடங்கி மாவட்டம், மாநிலம், தேசியம் என்று பல்வேறு நிலைகளில் நடைபெறும் போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
உடல் வலிமை, வேகம், சுறுசுறுப்பு, கவனம் மற்றும் மன ஒருமைப்பாட்டை வளர்ப்பதில் சிலம்பப் பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது.குறிப்பாகப் பெண்களுக்குச் சிலம்பம் ஒரு சிறந்த தற்காப்புக் கலையாகவும் பயன்படுகிறது. செல்போன், ஆன்லைன் விளையாட்டு என இன்றைய இளைஞர்கள் நேரத்தைச் செலவிட்டு வரும் நிலையில், பாரம்பரியக் கலையான சிலம்பத்தை கற்று அதில் சர்வதேச அளவில் சாதித்து வருவது பாராட்டுக்குரியது.
இந்த நிலையில், கோவாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டியில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 24 மாணவ, மாணவிகள் பங்கேற்றுத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்று தங்க பதக்கங்களை வென்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பில் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.
வெற்றியுடன் திரும்பிய மாணவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இது குறித்துத் தங்கப் பதக்கம் வென்ற மாணவி கூறியதாவது:-
சிலம்பம் பெண்களுக்கு ஒரு முக்கியமான தற்காப்பு கலை. அதேபோல் உடல் ஆரோக்கியமாகவும், எந்த நோய் நொடியுமின்றியும் இருக்க இது உதவும். கோவாவில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியில் நாங்கள் 24 பேர் கலந்து கொண்டோம்.
இந்தப்போட்டியில் 21 பேர் ஒற்றை சிலம்ப போட்டியிலும், 3 பேர் இரட்டை சிலம்ப போட்டியிலும் முதலிடம் பிடித்து தங்க பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளோம். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது ஆசிய போட்டிக்கு பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். அதிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்போம்"
இவ்வாறு அவர் கூறினார்.