

தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே மழையில் நனைந்தவாறு ஆடுகளை வீட்டிற்கு ஓட்டிச் சென்ற தொழிலாளி மீது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி அருகே உள்ள பெரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் மதன்குமார் (வயது 24). தொழிலாளி. இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வந்தார். தினமும் காலையில் கிராமத்தின் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வதும், பின்னர் மாலையில் வீட்டிற்கு ஓட்டி வருவதும் இவரது வழக்கமாகும்.
இந்த நிலையில், நேற்று காலையிலும் மதன்குமார் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார். நேற்று மாலையில் அப்பகுதியில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை மதன்குமார் அவசர அவசரமாக வீட்டிற்கு விரட்டி சென்று கொண்டிருந்தார். பெரியநாயகிபுரம் அருகே மழையில் நனைந்தவாறு ஆடுகளுக்கு பின்னால் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக மதன்குமார் மீது திடீரென பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகிய அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.