சிறுவாச்சூர் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறுவாச்சூர் சந்தையில் ஆடுகளின் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
சிறுவாச்சூர் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்
Published on

ஆட்டுச்சந்தை

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் இருந்து அய்யலூர் செல்லும் சாலையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று ஆட்டுச்சந்தை கூடுவது வழக்கம். இந்த ஆட்டு சந்தைக்கு ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வரும். இந்த ஆடுகளை வாங்குவதற்காக ஆடு வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்டோர் ஏராளமானோர் வந்து செல்வார்கள். அதன்படி வெள்ளிக்கிழமையான நேற்று அதிகாலை 3 மணியளவில் சிறுவாச்சூரில் ஆட்டுச்சந்தை தொடங்கியது.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடு வளர்ப்போர் மற்றும் விற்பனையாளர்கள் லாரி, சரக்கு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு அதிகாலையில் இருந்தே சிறுவாச்சூர் ஆட்டுச்சந்தையில் குவிய தொடங்கினர்.

முன்கூட்டியே நடத்தப்பட்டது

நாளை (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதால் ஆடுகளை வாங்க பொதுமக்கள், வியாபாரிகள், இறைச்சி கடைக்காரர்கள் வருவார்கள் என்று ஆடுகளுடன் கால்நடை வளர்ப்பவர்களும், வியாபாரிகளும் சந்தைக்கு வந்தனர். ஆனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அருகே உள்ள மாவட்டங்களில் சில பகுதிகளில் முன்கூட்டியே நேற்று ஆட்டுச்சந்தை நடத்தப்பட்டது.

ரூ.50 லட்சத்துக்கு மேல் விற்பனை

இதனால் எதிர்பார்த்த அளவுக்கு சிறுவாச்சூர் சந்தைக்கு ஆடுகளை வாங்க ஆட்கள் வரவில்லை. ஆனாலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடுகளின் விலை உயர்வால் சந்தையில் ஆடுகளின் விற்பனை அமோகமாக நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் சந்தையில் விற்பனையாகின. சுமார் ரூ.50 லட்சத்துக்கு மேல் ஆடுகள் விற்பனை ஆனது என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com