

மதுரை,
தமிழ்நாட்டில் தீபாவளி நாளில் வெவ்வேறு இடங்களில் 15 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், மதுரையில் புதிதாக திறந்த நகைக்கடையில் கொள்ளை நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பழங்காநத்தம்-காளவாசல் பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் தனிஷ்க் ஜூவல்லர்சின் புதிய ஷோரூம் உள்ளது. இந்த நகைக்கடையானது, சில தினங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டது. 3 தளங்கள் கொண்ட இந்த ஷோரூமில், தரைதளம் வாகன நிறுத்தும் இடமாகும். முதல் தளத்தில் தங்க நகை விற்பனை பிரிவு உள்ளது.
2-வது தளத்தில் வைர நகைகள் விற்பனையகமும், 3-வது தளத்தில் வெள்ளி நகைகள், பொருட்கள் விற்பனையகமும் அமைக்கும் பணிகள் நடந்துவந்தன. இதுதவிர அந்த நகைக் கடை சுற்றுப்பகுதிகளிலும், வாகன பார்க்கிங் பகுதியிலும் சில கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிக்காக, நகைக்கடையின் பின்பகுதியில் இரும்பு கம்பிகளுடன் சாரம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் நேற்று காலை 9.30 மணி அளவில் நகைக்கடையை திறக்க ஊழியர்கள் வரத்தொடங்கினர். கடையை திறந்து பார்த்தபோது, முதல் தளத்தில் அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விற்பனைக்காக வைத்திருந்த ஏராளமான நகைகள் மாயமாகி இருந்தன. அவற்றை வைக்க பயன்படுத்திய பெட்டிகள் காலியாக ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.
நகைகள் பெருமளவில் கொள்ளைபோனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், நகைக்கடைக்குள் சென்று பார்வையிட்டனர். சுமார் 15 கிலோ தங்கநகைகளும், இதுதவிர பல வைர நகைகளும் கொள்ளைபோனது உறுதியானது. இந்த தங்க, வைர நகைகளின் மொத்த மதிப்பு ரூ.21 கோடி வரை இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
கொள்ளை நடந்த கடையில் பதிவான தடயங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். இதுபோல் மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு, தீவிர சோதனை நடந்தது. மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உள்பட அதிகாரிகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தினர்.
கடையில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில், உடல் முழுவதையும் கருப்பு துணியை சுற்றிக்கொண்டும். முகமூடி, கையுறை அணிந்தவாறும் ஒருவன் வந்துள்ளான். கட்டிடத்தின் பின்புறம் அமைத்திருந்த இரும்பு சாரம் வழியாக மொட்டை மாடிக்கு சென்று, அங்கிருந்து லிப்ட் அமைக்கும் பணிக்காக போடப்பட்ட கயிற்றை பிடித்து லிப்ட் பாதை வழியாகவே இறங்கி முதல் தளத்திற்குள் புகுந்துள்ளான்.
பின்னர், அந்த தளத்தில் விற்பனைக்காக வைத்திருந்த நகைகளை, ஒவ்வொன்றாக எடுத்து அவன் கொண்டு வந்த பெரிய பையில் போட்டு நிரப்பி, பதற்றமின்றி புறப்பட்டுள்ளான். வெளியே வருவதற்காக ஒரு ஜன்னலின் இரும்பு கதவை உடைத்து திறந்து அதன் வழியாக தப்பிச்சென்ற காட்சிகள் பதிவாகி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் கொள்ளையனின் முகம் பதிவாகாத நிலையில் உடல் அமைப்பை அடிப்படையாக கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை நடந்த இடத்தில் இருந்து மதுரை ரெயில் நிலையம் அருகே இருப்பதால், ரெயில் மூலமாக கேரளம் அல்லது வடமாநிலங்களுக்கு கொள்ளையன் தப்பிச்செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. எனவே, பல்வேறு ரெயில் நிலையங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனை நடந்து வருகிறது.
நகைக்கடை அருகே வேறு சில கட்டிட பணிகளும் நடைபெற்று வருவதால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
நகைக்கடையில் கட்டிட மற்றும் அலமாரி அமைப்பு பணிகளில் ஈடுபட்ட நபர்களுக்கு கொள்ளை சம்பவத்தில் பின்னணி உள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும், இதற்காக வந்தவர்கள் வடமாநில தொழிலாளர்கள் என்பதால் அவர்களது விவரங்களும் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், புதிதாக திறக்கப்பட்ட இந்த ஷோரூமில் 25 பணியாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். அவர்களிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த நகைக்கடையில் சுமார் 80 கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த நிலையில் அதில் ஏதாவது ஒன்றிலாவது கொள்ளையனின் முகம் பதிவாகி இருக்கிறதா? என போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
கண்காணிப்பு கேமராவில் ஒரு நபரின் உருவம்தான் பதிவாகி இருப்பதாகவும், ஆனால் 2 அல்லது 3 பேர் இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய டுவிஸ்ட்
நகைக்கடையில் முகமூடி அணிந்த நபர் கடந்த வாரமே கொள்ளையடிக்க முயன்ற சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது. 2-வது முயற்சியில் நகைக்கடையில் கொள்ள அடித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.