

கோவை,
தங்கத்தின் விலை உயர்வால் நகை உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மத்திய அரசுக்கு விடுக்கப்படும் கோரிக்கைகள் குறித்து உருவாக்கப்பட்ட அறிக்கையை தங்க நகை உற்பத்தியாளர்கள் கோவையில் வெளியிட்டனர்.
அதில், எதிர்பாராத தங்கம் விலை உயர்வு நகை உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மூலதன நெருக்கடியையும் ஆபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கையிருப்பில் உள்ள இருப்புக்கும், மதிப்பு உயர்வுக்கும் வரி விதிக்கப்படுகிறது.
எனவே உள்நாட்டு விற்பனைக்கான ஏற்றுமதி விலைப்பட்டியல் முறையை அறிமுகப்படுத்த வேண்டும். குறு மற்றும் சிறு நகை உற்பத்தியாளர்களுக்கான ஊக அடிப்படையிலான வரிவிதிப்பு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
பின்னர் சங்க தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியதாவது:- கடந்த 2 ஆண்டுகளில் 140 சதவீதம் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போதைய சூழலில் மூலதனத்தையே விற்றுதான் வரியை செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வரிச்சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இது குறித்து நாங்கள் தயாரித்த அறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடமும், மத்திய மந்திரி பியூஸ் கோயலிடமும் கொடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.