

பழனி,
பழனி மலைக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் தினமும் 10 ஆயிரம் பேருக்கு உணவு வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கடந்த 13.9.2012 முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மலைக்கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அன்னதானத்தில் பக்தர்களுக்கு சாதம், ரசம், பொரியல், கூட்டு, அப்பளம், பாயசம் மற்றும் மோர் உள்ளிட்ட உணவுகள் தரமாகவும், சுவையாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் அன்னதானத்தில் உணவு சாப்பிடும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுவரை மலைக்கோவிலில் தினமும் சராசரியாக 5 ஆயிரம் பக்தர்களும். கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் 7 ஆயிரம் பக்தர்கள் வரையிலும் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டு வந்தனர். ஒரு பந்தியில் 204 பக்தர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து. அன்னதானம் வழங்கும் வசதியை விரிவுபடுத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி மலைக்கோவிலில் 4 இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு பந்தியில் 204 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் இருந்த எண்ணிக்கை தற்போது 410 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மலைக்கோவில் அன்னதான மடத்தில் பக்தர்கள் காத்திருக்கும் அறை மாற்றியமைக்கப்பட்டு, கூடுதல்
இடவசதியுடன் அன்னதானம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் மேலும் 2 இடங்களிலும் அன்னதானம் வழங்கும் வசதி தற்போது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் அதிக எண் ணிக்கையிலான பக்தர்கள் அன்னதானம் சாப்பிடும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தினமும் சுமார் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் அன்னதானம் சாப்பிடும் வகையிலும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையிலும் இந்த விரிவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலைக்கோவிலில் அன்னதானம் வழங்கும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.