

சென்னை,
வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரெயில் ஜூலை 1-ந் தேதி முதல் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணி காரணமாக சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. அதில், சென்னை - வேளாங்கண்ணி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் ஒன்று. தற்போது, அந்த ரெயில் மீண்டும் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்தே புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை எழும்பூர் - வேளாங்கண்ணி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்கள்: 16175/16176) தற்காலிகமாக தாம்பரத்தில் இருந்து இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. வரும் ஜூலை 1-ந் தேதி முதல் மீண்டும் சென்னை எழும்பூரில் இருந்தே இந்த ரெயில் புறப்படும். அதாவது, வேளாங்கண்ணியில் இருந்து ஜூன் 30-ந் தேதி புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் மறுநாள் காலை எழும்பூரை சென்றடையும். அன்று (ஜூலை 1) இரவு 9 மணிக்கு அங்கிருந்தே ரெயில் புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.