

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகர கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் சிவந்தாகுளம் 5-வது தெருவில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தூத்துக்குடியில் சி.ஐ.டி.யு. கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் தூத்துக்குடி மாநகர நிர்வாகிகள் கூட்டம் இன்று மாநகர தலைவர் தாசன் தலைமையில் நடைபெற்றது. மாநகர செயலாளர் ஆறுமுகம் வேலை அறிக்கையையும், பொருளாளர் ஆனந்த் வரவு செலவு அறிக்கையும் முன்வைத்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரசல் கட்டுமான சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்ட முடிவுகளை விளக்கி பேசினார். இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் முனியசாமி, மாரியப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பொதுமக்கள், குடியிருப்புவாசிகளுக்கும், கட்டுமான தொழிலாளர்களுக்கும் பெரும் இடையூரை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சிவந்தாகுளம் 5-வது தெருவில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை (10147) அகற்ற வேண்டும். கட்டுமான தொழிலாளர்கள் வேலைக்காக கூடும் சுகம் ஓட்டல் அரசமரம் மற்றும் இரண்டாம் கேட் வடபத்ரகாளியம்மன் கோவில் ஆகிய 2 மையங்களில் தொழிலாளர்கள் பயன்படுத்தும் வகையில் கழிப்பறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியுடன் ஓய்வறை அமைக்க வேண்டும். கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் கட்டுமான பணிகள் குறைந்து வேலையிழப்புகள் எற்பட்டு வருவதை கவனத்தில் கொண்டு கட்டுமான பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாநில அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.