அரசு நிறுவனங்களுக்கும் ‘ஆன்லைன்’ முறையில் பத்திரப்பதிவு மேற்கொள்ள அனுமதி

இதற்காக பதிவுத்துறையை தொடர்பு கொண்டு, ‘லாக்-இன்’ எனப்படும் நுழைவு அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அரசு நிறுவனங்களுக்கும் ‘ஆன்லைன்’ முறையில் பத்திரப்பதிவு மேற்கொள்ள அனுமதி
Published on: 

சென்னை,

வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொழில் முதலீட்டு நிறுவனம் ஆகியவையும் நிலம், கட்டிடம் தொடர்பான பத்திரங்களை ‘ஆன்லைன்’ முறையில் பதிவு செய்யலாம்.

தமிழகத்தில் வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களும், ‘ஆன்லைன்’ முறையில் பத்திரப்பதிவு மேற்கொள்ள பதிவுத்துறை அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் புதிய திட்டங்களின் கீழ் வீடு, மனை விற்பனைக்கான பத்திரங்களை, சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் செல்லாமல் பதிவு செய்யும் வசதி கடந்த ஆகஸ்டு 17-ந்தேதி தொடங்கப்பட்டது. இந்த வசதியில் கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு மட்டுமே நுழைவு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. வீட்டுவசதி வாரியம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படாததால், அவை பழைய நடைமுறையிலேயே பத்திரப்பதிவு மேற்கொண்டு வந்தன.

இந்த நிலையில், பதிவுத்துறை தலைவர் அருண்சுந்தர் தயாளன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொழில் முதலீட்டு நிறுவனம் ஆகியவையும் நிலம், கட்டிடம் தொடர்பான பத்திரங்களை ‘ஆன்லைன்’ முறையில் பதிவு செய்யலாம்.

இதற்காக பதிவுத்துறையை தொடர்பு கொண்டு, ‘லாக்-இன்’ எனப்படும் நுழைவு அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தொடர் உரிமை ஒப்படைப்பு ஆவணங்களையும் ‘ஆன்லைன்’ முறையில் பதிவு செய்யலாம்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com