

சென்னை,
“தவெக ஆட்சியில் இரண்டே இரண்டுக்குத்தான் போட்டி... ஒன்று மின்வெட்டு, மற்றொன்று அரிவாள் வெட்டு” என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார்.
இதுகுறித்து அமைச்சர் ராஜ்மோகனிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-
“பட்டிமன்ற பேச்சாளரான நான் சட்டமன்றத்தில் பேச ஆரம்பித்துவிட்டேன். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டிமன்ற பேச்சாளரைப் போல் எதுகை, மோனையில் பேசிக்கொண்டிருக்கிறார். அந்த போட்டியில் கூட தி.மு.க. இல்லை.
பெண்கள், வாக்காளர்கள், மக்கள், சாமானியர்கள் தயவில்தான் ஆட்சி அமைத்துள்ளோம். எதிர்க்கட்சிகளுக்கு மெஜாரிட்டி இல்லை. 96 இடங்களில் வெற்றி பெற்றபோதுகூட தி.மு.க. ஆட்சி அமைத்தது. யார் தயவு?
யாருடைய தயவும் எங்களுக்கு தேவை இல்லை. தி.மு.க. கூட்டணிக் கட்சியினரிடம் பண்ணையார் மனப்பான்மையுடன்தான் இருந்தது.
‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்று முதலமைச்சர் கூறினார். அதைச் செய்துள்ளார். மக்களின் தயவில்தான் ஆட்சி நடக்கிறது. வேறு யாருடைய தயவிலும் ஆட்சி நடக்கவில்லை. இந்த ஆட்சி தொடரும்” என்றார்.