

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் செலவினங்களை குறைப்பதற்கும் வருவாயை பெருக்குவதற்கும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபனின் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மின்னணு பயணச்சீட்டுகளின் பின்புறம் விளம்பரங்களை அச்சிடுவதன் மூலம், பயணச்சீட்டுகளை விலையில்லாமல் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு கொள்முதல் செய்து போக்குவரத்துக் கழங்களின் செலவை குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, முதற்கட்டமாக ஆறு மாதத்திற்குரிய சுமார் ஒன்பது கோடி ரூபாய் மதிப்புள்ள மின்னணு பயணச்சீட்டுகளை அச்சிடுவதற்கான காகிதச் சுருள் (Paper Roll) விலையில்லாமல் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரும் விபரங்கள் https://tntenders.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தப்புள்ளிக்கு உற்பத்தியாளர்கள் சிறு, குறு மற்றும் பெரிய வணிக நிறுவனங்கள்/ விளம்பரதாரர்கள் / அச்சக நிறுவனங்கள் மற்றும் அவர்களால் நியமிக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் / முகவர்கள் மற்றும் பிற நிறுவனங்களிடமிருந்து, பின்புறம் விளம்பரம் செய்யப்பட்ட மின்னணு பயணச்சீட்டுகள் அச்சிடுவதற்கான காகிதச் சுருள் (Paper Roll), அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கும், ஆறு மாதங்களுக்கு கட்டணமில்லாமல் கொள்முதல் செய்திட மின்னணு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள தரப்பினர் ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்க இதன் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.