குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? எடப்பாடி பழனிசாமி விளக்கம்

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது பற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? எடப்பாடி பழனிசாமி விளக்கம்
Published on

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை பற்றி இன்று (நேற்று) ஆலோசனை நடத்தினேன். பருவமழையும், இயற்கையும் பொய்த்ததன் விளைவாக ஒரு சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதை போக்குவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் சராசரியாக பெய்ய வேண்டிய மழையின் அளவு மிக மிகக் குறைவாக இருந்தது. எனவே நிலத்தடி நீரின் அளவும் குறைந்துவிட்டது. அதனால், சென்னைக்கு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் மூலம் தினமும் 525 மில்லியன் லிட்டர் நீர் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் 4 ஏரிகளுமே வறண்டுவிட்டன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்தது. ஆனால் தற்போது ஒரு சொட்டு தண்ணீர் கூட, பூண்டி, செங்குன்றம், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளில் இருந்தும் கிடைக்கவில்லை.

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய கிருஷ்ணா நதி நீர் கிடைக்கவில்லை. அந்த நதியில் இருந்து 18 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு 2 டி.எம்.சி. தண்ணீர்தான் கிடைத்துள்ளது.

கண்டலேறு அணையில் 4 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பதாக ஆந்திரா அரசு கூறியுள்ளது. அங்கு 8 டி.எம்.சி. தண்ணீர் இருந்தால்தான், கால்வாய் மூலமாக கிருஷ்ணா நதிநீரைப் பெறமுடியும். அங்கிருந்தும் தண்ணீர் பெறுவதற்கு சாத்தியம் இல்லாத சூழ்நிலைதான் உள்ளது.

எனவே அரசு பல வழிகளைக் கையாண்டு சென்னைக்கு தேவையான குடிநீரை ஓரளவு வழங்கி வருகிறது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் 200 மில்லியன் லிட்டர் நீரும், நிலத்தடி நீரை எடுத்தும் குடிநீர் வழங்குகிறோம். சென்னையைச் சுற்றியுள்ள குவாரிகளில் இருந்தும் நீர் எடுத்து சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்குகிறோம்.

அதுமட்டுமல்லாமல், ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலமாக சென்னைக்கு தண்ணீர் கொண்டுவர ஆலோசிக்கப்பட்டுள்ளது. தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீரை சென்னைக்கு கொண்டுவர திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கு ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 6 வாரங்களுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

வீராணம் ஏரியில் இருந்து தண்ணீரை கொண்டுவரும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. 2 மாதங்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து வீராணத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு அங்கு தேக்கி வைத்து அதையும் சென்னை மக்களுக்கு வழங்கி வருகிறோம். இது தொடர்பாக அனைத்து மண்டலங்களுக்கும் உயர் அதிகாரிகளை நியமித்து குடிநீர் பிரச்சினை இருக்கும் இடங்களை ஆய்வு செய்து, கூடுதலாக லாரிகள் மூலம் அந்தப் பகுதி மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தினமும் சென்னைக்கு 800 லாரிகள் மூலம் 9,800 லாரி நடைகளில் குடிநீர் வழங்கப்படுகிறது.

கிராமப்புற பகுதிகளுக்கும் தேவையான அளவு தண்ணீரை வழங்கி வருகிறோம். எங்குமே தண்ணீர் இல்லை என்ற சூழ்நிலை ஏற்படாத அளவுக்கு, தேர்தலுக்கு முன்னதாகவே ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன.

மக்களுக்கு தட்டுப்பாடில்லாமல் குடிநீர் வழங்குவது பற்றி மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரையும், உத்தரவும் வழங்கப்பட்டது. தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டது.

தேர்தல் காலகட்டத்தில் அரசு முழுமையாக செயல்பட முடியவில்லை. ஏற்கனவே வழங்கப்பட்ட ஆலோசனையின்படி அதிகாரிகள் செயல்பட்டு குடிநீர் வழங்கினர். தேர்தல் முடிந்த பிறகு மே 29-ந் தேதியன்று மூத்த அமைச்சர்களை அழைத்து ஆலோசனை நடத்தினேன். அதிலும் குடிநீரை தடையில்லாமல் வழங்க ஆணையிடப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது.

சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்க சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்துக்கு ரூ.158.42 கோடி ஒதுக்கப்பட்டது. நகர மற்றும் கிராமப்புற பகுதி குடிநீர் திட்டப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியத்துக்கு ரூ.36 கோடியும், நகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.56 கோடியும், பேரூராட்சித் துறைக்கு ரூ.16.32 கோடியும் ஒதுக்கப்பட்டு குடிநீர் பிரச்சினையை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பணிகள் நிறைவேற்றப்படுகின்றன.

கடந்த ஏப்ரல் 1-ந் தேதி, 15-ந் தேதி, மே 6-ந் தேதி, 20-ந் தேதி ஆகிய தேதிகளில் தலைமைச் செயலாளர், உயர் அதிகாரிகளை அழைத்து பேசி, குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆலோசனை வழங்கினார். இவையெல்லாம் குடிநீர் பிரச்சினையை போக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com