

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியைச் சேர்ந்தவர் சேர்மதுரை (வயது 42). இவரது மனைவி முத்துச்செல்வி(36), நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதி இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக, கடந்த 4 ஆண்டுகளாக முத்துச்செல்வி தனது கணவரைப் பிரிந்து, வள்ளியூர் சந்தைத் தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
அங்கே இருந்தவாறு தினமும் நாகர்கோவிலுக்குச் சென்று பணிபுரிந்து வருகிறார். தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்ததால் முத்துச்செல்வி மீது சேர்மதுரை கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று மாலை நாகர்கோவிலில் இருந்து பணி முடிந்து பேருந்து மூலம் வள்ளியூர் திரும்பிய முத்துச்செல்வியை, பேருந்து நிலையத்திலேயே சேர்மதுரை எதிர்கொண்டுள்ளார்.
அவரைப் பின்தொடர்ந்து சென்று பேச்சு கொடுத்த சேர்மதுரை, திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முத்துச்செல்வியைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கழுத்து மற்றும் தோள்பட்டையில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு முத்துச்செல்வி ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த வெறிச்செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், தப்ப முயன்ற சேர்மதுரையை விரட்டிப் பிடித்துத் தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்த வள்ளியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த முத்துச்செல்வியை மீட்டு சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்களிடம் இருந்த சேர்மதுரையை மீட்ட போலீசார், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம் வள்ளியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.