அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு தமிழக ஆளுநர், அமைச்சர்கள் இரங்கல்

அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு தமிழக ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு தமிழக ஆளுநர், அமைச்சர்கள் இரங்கல்
Published on

சென்னை,

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.

முன்னதாக அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கடந்த மாதம் 13-ந்தேதி திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சி.டி.ஸ்கேனில் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு நுரையீரலில் 50 சதவீதம் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் அதிகரித்ததால், செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி மூலம் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அமைச்சர் துரைகண்ணுவின் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அமைச்சர் துரைகண்ணுவின் மறைவு அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். அவரது மறைவு ஈடு செய்யமுடியாத இழப்பு .அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அதிமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

அமைச்சர் துரைகண்ணுவின் மறைவு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அமைச்சர் துரைகண்ணுவின் மறைவு, அதிமுகவுக்கு பேரிழப்பு. அமைச்சர் துரைகண்ணு ஒரு எளிமையான மனிதர், பொதுமக்களிடம் அன்பாக பழகக்கூடியவர். அவரது மறைவுக்கு அரசு விதிமுறைப்படி இரங்கல் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

அமைச்சர் துரைகண்ணுவின் மறைவுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ள இரங்கல் பதிவில், பெரும் அன்புக்குரிய மாண்புமிகு தமிழக வேளாண் துறை அமைச்சர், திரு.துரைக்கண்ணு அவர்கள் காலமான செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் தற்போது அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலிக்குப் பிறகு இன்று துரைக்கண்ணுவின் சொந்த ஊரான பாபநாசத்துக்கு அவரது உடல் எடுத்து சென்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com