கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - கம்யூனிஸ்டு கட்சிகள் வலியுறுத்தல்

கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்டு கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''கோவை, கார் வெடிப்பு சம்பவத்தை சுயநல அரசியலுக்காக பயன்படுத்திக்கொள்ளும் பா.ஜ.க.வின் முயற்சிகளுக்கு கவர்னர் துணைபோவது வன்மையான கண்டனத்திற்குரியது. கோவையில் ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னர், காவல்துறையின் துரிதமான செயல்பாட்டை பாராட்டிவிட்டு, என்.ஐ.ஏ. விசாரணை தாமதப்படுத்தப்பட்டதாகவும், அதனால் ஆதாரங்கள் அழிய வாய்ப்புள்ளது என்றும் கற்பனை சரடுகளை அள்ளி விட்டுள்ளார். மாநில அரசாங்கத்திற்கு உள்நோக்கம் கற்பிக்க முயற்சி செய்திருக்கிறார். எனவே, கவர்னர் ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து நீக்க வேண்டும்'' என்று தெரிவித்து உள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, கோவை, கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு தாமதம் செய்ததாக புகார் கூறியுள்ளார். கார் சிலிண்டர் வெடிப்பில் மரணமடைந்த ஜமேஷ் முபினிடம் 2019-ம் ஆண்டு என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரிகள் விசாரித்துள்ளனர்? என்.ஐ.ஏ. கண்காணிப்பு எல்லைக்குள் இருந்த அவர் எப்படி சுதந்திரமாக நடமாட முடிந்தது என்ற கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தான் விளக்கம் கூற வேண்டும். இதுபோன்ற கேள்விகளை கருத்தில் கொள்ளாமல், அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட, உயர் பொறுப்பில் இருக்கும் கவர்னர் பொறுப்பற்ற முறையில் பேசி, மலிவான அரசியலில் ஈடுபட்டிருப்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது'' என்று தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com