

சென்னை,
அரசு நிர்வாகத்தில் கவர்னர் நேரடியாக தலையிடுவது, மக்களாட்சி முறைமையை தகர்க்கும் செயல் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு கவர்னர் ஆர்.வி.அர்லேகர் நேற்று (02.07.2026) காலை மதுரையில் மாவட்ட கலெக்டர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் அரசுத் திட்டங்கள் அமலாக்கம் பற்றி மட்டும் அல்லாமல், சட்டம் ஒழுங்கு, போதைப் பொருள் ஒழிப்பு, பொது சுகாதாரம், நீர்நிலைகள் பராமரிப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. கவர்னர் ஆர்.வி.அர்லேகரின் இந்த நடவடிக்கை அரசியலமைப்பு அதிகாரத்தை அத்துமீறிய செயலாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் கீழ் அரசிடம், ஆளுநர் தனக்கு வேண்டிய விபரங்களை கேட்டுப் பெற கடமைப்பட்டவர். இதனைத் தவிர்த்து அரசு நிர்வாகத்தில் நேரடியாக தலையிடுவது, மக்களாட்சி முறைமையை தகர்க்கும் செயலாகும்.
இத்தகைய செயலில் ஈடுபடும் கவர்னர் ஆர்.வி.அர்லேகரின் அதிகார அத்துமீறலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், ஆளுநர் அத்துமீறல் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறது.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.