

சென்னை,
சென்னை ராயப்பேட்டை பகுதியில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் டிரைவர் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை ராயப்பேட்டை முத்தையா 1-வது தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 36). டிரைவரான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சதீஷின் மனைவி, கடந்த 10-ந்தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவி இறந்த துக்கத்தில் சதீஷ் கவலையுடனும், மனஉளைச்சலிலும் இருந்ததாக கூறப்படுகிறது. யாரிடமும் பேசாமலும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சதீஷ், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில், மனைவியின் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தந்தையின் உடலை பார்த்து மகன்கள் இருவரும் கதறி அழுதனர். தாய் இறந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் தந்தையும் தற்கொலை செய்து கொண்டதால் அவர்களது மகன்கள் இருவரும் பரிதவிப்பதை கண்டு உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வேதனை அடைந்தனர். இதுபற்றி ஐஸ்-அவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.