குரூப் 4 தேர்வுக்காக இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்

22 லட்சம் பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எழுத இருக்கும் குரூப்-4 தேர்வு மையத்துக்கு வந்து செல்வதற்கு ஏதுவாக சிறப்பு பஸ்களை போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
குரூப் 4 தேர்வுக்காக இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Published on

குரூப்-4 தேர்வு

குரூப்-4 பதவிகளில் வரும் கிராம நிர்வாக அலுவலர் இளநிலை உதவியாளர் உள்பட 7 ஆயிரத்து 301 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது. இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 ஆண்கள் 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பெண்கள் 131 திருநங்கைகள் என மொத்தம் 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இதற்கான தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற இருக்கிறது. தமிழகம் முழுவதும் 316 தாலுகா மையங்களில் உள்ள 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் இந்த தேர்வு இன்று நடக்கிறது.

தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வர அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். 9 மணிக்கு ஓ.எம்.ஆர். விடைத்தாள்கள் தேர்வர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

சிறப்பு பஸ்கள்

கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு தேர்வர்கள் தேர்வு மைய வளாகத்தில் முககவசம் அணிந்திருக்க வேண்டும். முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

தேர்வு மையத்துக்கு தேர்வர்கள் எளிதாக வந்து செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் சாதாரணமாக இயக்கப்படும் பஸ்கள் சிறப்பு பஸ்கள் என மொத்தம் 11 ஆயிரத்து 670 பஸ்கள் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் எவ்வளவு தேர்வு மையங்கள் இருக்கிறது? எங்கெங்கெல்லாம் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது? என்பது போன்ற விவரங்களை போக்குவரத்து கழக அதிகாரிகள் கேட்டு பெற்று அதற்கேற்றாற்போல் தேர்வு மையத்துக்கு வந்து செல்வதற்கு ஏதுவாக பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com