குரூப் 4 தேர்வு சர்ச்சை; நீதி கேட்டு பிரதமர், தமிழக கவர்னருக்கு 200 தேர்வர்கள் மனு

காலியாக உள்ள 3,935 இடங்களுக்கு 11,48,019 பேர் போட்டியிடுகிறார்கள்.
குரூப் 4 தேர்வு சர்ச்சை; நீதி கேட்டு பிரதமர், தமிழக கவர்னருக்கு 200 தேர்வர்கள் மனு
Published on

சென்னை,

தமிழக முழுவதும் குரூப் 4 தேர்வு ஜூலை 12-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை ஏறக்குறைய 11.5 லட்சம் பேர் எழுதினார்கள். 4,922 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் தேர்வு நடந்தது. சென்னையில் 316 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது.

தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் 314 மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. காலை 9.30 மணிக்க்கு தொடங்கிய தேர்வு நண்பகல் 12.30 மணிக்கு நிறைவு பெற்றது. குரூப் 4 தேர்வின் முடிவுகள் மூன்று மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.

தேர்வை எழுத 13,89,738 பேர் எழுத விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், 2,41,719 பேர் தேர்வை எழுதவில்லை. ஆக 11,48,019 பேர் (82.61 சதவீதம்) தேர்வை ஆர்வத்துடன் எழுதி இருக்கிறார்கள். இதன் மூலம் காலியாக உள்ள 3,935 இடங்களுக்கு 11,48,019 பேர் போட்டியிடுகிறார்கள். இதன்படி, ஒரு காலி இடத்துக்கு 292 பேர் போட்டியிடுகிறார்கள்.

இந்நிலையில், குரூப் 4 தேர்வு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. கேள்வித்தாள்கள் முன்கூட்டியே லீக் ஆனதாகவும், தேர்வு மையங்களில் சீலிடப்படாத கேள்வித்தாள் கட்டுகள் இருந்ததாகவும் தேர்வர்கள் புகார் எழுப்பினர்.

இதுதவிர, முனைவர் கல்வி தகுதி நிலையில் கேட்க வேண்டிய கேள்விகளை, பத்தாம் வகுப்பு பாடத்திட்ட அளவில் நடைபெறும் போட்டி தேர்வில் கேட்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தமிழகத்தில் நான்கு இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும், மீண்டும் மறு தேர்வு நடத்த வேண்டும், இறந்த இளைஞர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், தேர்வு குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 200 தேர்வர்கள் கையெழுத்திட்டு, குடியரசு தலைவர், பிரதமர், தேசிய மகளிர் ஆணையம் மற்றும் தமிழக கவர்னர் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com