பட்டாசு உற்பத்திக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படுமா? - உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு

பட்டாசு உற்பத்திக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பட்டாசு உற்பத்தியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பட்டாசு உற்பத்திக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படுமா? - உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு
Published on: 

சிவகாசி,

இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்தும் 90 சதவீத பட்டாசுகள் விருதுநகர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த தொழில் மூலம் 8 லட்சம் பேர் வாழ்வாதாரம் பெற்று உள்ளனர். பட்டாசு உற்பத்தி மூலம் அரசுக்கு பல்வேறு வகையில் பல கோடி ரூபாய் வரியாக செலுத்தப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பட்டாசு உற்பத்திக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. இதனால் இந்த தொழில் மிகவும் நசிந்து போகும் நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து பட்டாசு உற்பத்தியர்கள் ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொண்டனர். அதன் பின்னர் அந்த வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

தற்போது உள்ள சூழ்நிலையில் கடந்த காலங்களை போல் பட்டாசு விற்பனை இல்லை என்று பட்டாசு உற்பத்திக்கு தற்போது அதிகஅளவில் செலவாகிறது. மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. தொழிலாளர்களின் சம்பளமும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

அதனால் பட்டாசு உற்பத்திக்கு ஆகும் செலவு கனிசமாக உயர்ந்து விட்டதால் தற்போது முன்பு போல் தொழிலை நடத்தமுடியாத ஒரு நிலையில் பட்டாசு உற்பத்தியாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா பாதிப்பு பட்டாசு தொழிலையும் விட்டு வைக்கவில்லை. கொரோனா காலத்தில் பட்டாசு ஆலைகள் இயங்க அரசு தடை விதித்ததால் உற்பத்தியும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. வருமானமும் பாதிக்கப்பட்டது.

அதனால் இந்த மாதம் டெல்லியில் நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பட்டாசு மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க ஏற்கனவே கொடுத்த மனுக்கள் குறித்து அதிகாரிகள் பரிசீலனை செய்து உரிய வரி குறைப்பு செய்தால் தொடர்ந்து இந்த பட்டாசு தொழில் பாதிப்பு இல்லாமல் நடக்க வாய்ப்பாக இருக்கும் என்று உற்பத்தியாளர்கள் கருதுகிறார்கள்.

அவர்கள் தற்போது உள்ள 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கோரிக்கையை நிறைவேற்றினால் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.

X