சென்னை,
நீட் தேர்வு கடந்த மாதம் (மே) 3-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 22 லட்சம் பேர் எழுதி இருந்த நிலையில், அந்த தேர்வில் வினாத்தால் கசிவு ஏற்பட்டதாக வெளியான புகாரை தொடர்ந்து விசாரிக்கப்பட்டு, அது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த தேர்வை ரத்து செய்வதாகவும், மறுதேர்வு வருகிற 21-ம் தேதி நடைபெற இருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்தது.
அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே விண்ணப்பித்து தேர்வு எழுதிய மாணவ - மாணவிகளின் தேர்வு கட்டணமும் திருப்பி தரப்படும் என்றும், மறுதேர்வுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் மறுதேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டிருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி, neet.nta.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று தேர்வு கட்டணத்தை திரும்ப பெறுவதற்காக வங்கி கணக்கு விவரங்களை சரிபார்த்து பின்னர் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியிருக்கிறது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 011-40759000, 011-69227700 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தேர்வர்கள் பலரும் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய இணையதளத்தை ஒரே நேரத்தில் அணுகியதால், சர்வர் ஸ்தம்பித்தது.