

சென்னை,
ஆசிய விளையாட்டில் சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த வித்யா ராம்ராஜ் மற்றும் ராஜேஷ் ரமேஷை நேரில் சந்தித்து நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழ்நாட்டின் இரண்டு சிறுத்தைகளைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.
தங்கம், வெள்ளி, வெண்கலம் என வித்யா ராம்ராஜ் மூன்று பதக்கங்களுடன் திரும்பியிருக்கிறார். பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்ததும், 4x400 மீ. தொடர் ஓட்டத்தில் சீன வீராங்கனையை முந்தி சென்ற அந்தக் கடைசி சுற்றும் இந்திய விளையாட்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். ராஜேஷ் ரமேஷ், 4x400 மீ. தொடர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றிருக்கிறார்.
உங்கள் பதக்கங்கள், புழுதி படிந்த மைதானங்களில் கனவு காணும் ஒவ்வொரு இந்திய குழந்தைக்குமானவை. வாழ்த்துகள், சரித்திரம் தொடரட்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.