த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தின் முன்ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தை கைது செய்ய தனிப்படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கரூர்,

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இச்சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீசார் த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் (வயது 49), பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் மற்றும் சிலர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் கடந்த 29-ந்தேதி திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள கிராமத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை தனிப்படை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் ஆகியோரை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்தன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான பொதுநல வழக்குகள் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் சென்னை ஐகோர்ட்டு மதுரை அமர்வில் இன்று (03.10.2025) விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது த.வெ.க.வுக்கு தடை கோரும் ரமேஷ் என்பவரின் மனுவும் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

அதோடு 7 பொதுநல மனுக்கள் மீது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்த உள்ளது. அதன்படி இந்த பொதுநல மனுக்களின் விசாரணை முடிந்த பிறகு முன் ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com