அனல் பறந்த சட்டமன்றம்... தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளி - பதிலுரையை நிறைவு செய்தார் முதல்-அமைச்சர் விஜய்

முதல்-அமைச்சர் எப்போது பேசுவார் என்று கேட்டவர்கள், அவர் பதிலளிக்கும்போது அமைதியாக கேட்டிருக்க வேண்டும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.
அனல் பறந்த சட்டமன்றம்... தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளி - பதிலுரையை நிறைவு செய்தார் முதல்-அமைச்சர் விஜய்
Published on

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலளித்து பேசினார். அவரது பதிலுரைக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

மானியக் கோரிக்கை விவாதம்

கடந்த 18 நாட்களாக நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், முக்கிய நிகழ்வாக கடந்த 3-ந்தேதி (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கட்டுப்பாட்டில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பேசியதால் சட்டசபையில் அனல் பறந்தது.

யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோது, இடையே எழுந்து பேசிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், "உறுப்பினர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் அதற்கான தெளிவான விளக்கத்தை திங்கட்கிழமை (இன்று) அளிக்கிறேன். தற்போது நான் இங்கே இல்லை என்றாலும் யார்-யார் என்ன கேள்விகள் கேட்கிறார்கள் என்ற தகவல் எனக்கு வந்துவிடும். எல்லாவற்றிற்கும் தெளிவான பதிலை சொல்வேன். தற்போது உங்கள் சார்பாக அவர்களிடம் உத்தரவாதம் ஒன்றை கேட்கிறேன். அப்போது அவர்கள் (தி.மு.க.) யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது" என்று கூறிவிட்டு சட்டசபையை விட்டு வெளியேறிவிட்டார்.

முதல்-அமைச்சர் விஜய் பதிலுரை

இந்நிலையில் 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து, த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கரவொலியுடன் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனது உரையை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது;-

“மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கு அடித்தளம் காவல்துறை. ஒரு மாநிலத்தின் அமைதியில் தான் முன்னேற்றம் உள்ளது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால்தான் தொழில் முதலீடுகள் வரும். சட்டத்தை மதிக்காதவர்களுக்கு காவல்துறை எதிரியாக இருக்க வேண்டும்.

அரசு பணியில் இருக்கும் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, அவரது பெயர் நாளிதழ்களிலும், தொலைக்காட்சியிலும் வரும்போது அந்த செய்தி அவரை மட்டுமல்ல, அவரது குடும்ப உறுப்பினர்களையும் பாதிக்கிறது. எனவே அரசு ஊழியர்கள் தங்கள் பணியில் நேர்மையை கடைபிடித்து தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் எந்த அவப்பெயரும் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதே சமயம், ஊழல் தடுப்பு அமைப்புகள் தங்கள் சட்டப்பூர்வமான கடமையை எந்தவித தயக்கமும் இன்றி தொடர்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் த.வெ.க. அரசு எந்த சமரசமும் செய்யாது.

போதைக்கு எதிரான நடவடிக்கைகள்

கடந்த கால ஆட்சியாளர்களால் போதைப்பொருள் கலாசாரம் கவனிக்கப்படாமல் இருந்ததால், அது தற்போது வேரூன்றி வளர்ந்து நிற்கிறது. இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாக இருந்து வருகிறது. போதைப்பொருள் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.

இதற்காக போதைப்பொருள் தடுப்புப்படை தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை போதை என்கிற மரத்தின் ஒரு சில கிளைகளை மட்டும்தான் வெட்டியுள்ளோம். ஆனால் அதனை வேரடி மண்ணோடு அகற்ற வேண்டும். அது ஒரு நாளிலோ, 100 நாட்களிலோ முடிகின்ற பணி அல்ல.

மாநிலத்தின் 37 மாவட்டங்கள், 9 மாநகரங்களில் 65 போதைப்பொருள் தடுப்பு படைகள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் 3,263 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,846 கிலோ கஞ்சா மற்றும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 159 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை

இதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுக்காப்பை மையமாக கொண்டு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு, 2,546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்களுக்கு 327 நான்கு சக்கர வாகனங்கள், 109 இரண்டு சக்கர வாகனங்கள், மற்றும் ரூ.357 கோடியில் நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளின் மூலம் 268 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காணாமல் போன 125 பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் 37,150 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. 21 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன.

காவல் மரணங்களை தடுக்கும் நடவடிக்கைகள்

காவல் மரணம் என்பது ஒரு குடும்பத்தின் இழப்பு மட்டுமல்ல. காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சினையாகும். எனவே காவலில் எந்தவொரு மரணம் ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு குறித்து வெளிப்படையான, பாரபட்சமற்ற, சட்டப்பூர்வமான விசாரணை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி காவல் மரணம் தொடர்பான தகவல்கள் உரிய காலத்தில் தெரிவிக்கப்படுவதோடு, தேவையான மருத்துவ உடற்கூராய்வு மற்றும் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒரு காவலர் தவறு செய்திருந்தால் அவர் காவல்துறையை சேர்ந்தவர் என்பதற்காக எந்தவித பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை. தவறு செய்தவர் யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையை சரிவர செய்து வருகிறது. காவல் நிலைய மரணங்களை முற்றிலும் தவிர்க்கும் நோக்கில் சி.சி.டி.வி. கண்காணிப்பு பயிற்சி, மருத்துவ பரிசோதனைல், தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

‘வன்ம நதி ஓடுகிறது..’

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக ஆபாச நதியாக, வன்ம நதியாக ஓடுகிறது. அரசியல் ரீதியாக கருத்துகளை பதிவுசெய்யலாம். பெண்களுக்கு எதிரான கருத்துகளை அனுமதிக்க மாட்டோம். பெண்களை பற்றி அவதூறாக பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும்.

இங்குள்ள ஒரு உறுப்பினர், எலும்பை உடைப்பேன் என்று பேசுகிறார். அவர் என்ன ஆர்த்தோ டாக்டரா? தி.மு.க.வுக்கு ஓட்டு போடாதவர்களுக்கு நல்ல சாவு வராது என ஒருவர் பேசுகிறார். இப்படி பேசியதால்தான், இவர்கள் எதிர்கட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பை கொஞ்சமாவது மதிக்க வேண்டும்.

ஒரு சாம்பிள் பார்க்கலாமா?

“என் மேஜையில் இருக்கும் 3 பைல்களை ஓப்பன் செய்யுமாறு தி.மு.க.வினர் கூறினர். அதில் ஒரு சாம்பிளை பார்க்கலாமா? கடந்த ஆட்சியில் அமலாக்கத்துறை அனுப்பிய விவரங்களை படிக்கிறேன்.

சர்க்காரியா கமிஷன் -1977: தி.மு.க. ஆட்சியில் வீராணம் குழாய் திட்டத்துக்கு டெண்டர் வேண்டுமென்றால் இரண்டரை சதவீத கமிஷன் வேண்டும் என மாறன் கேட்டாராம். அதவது 40 லட்ச ரூபாய் கமிஷனாம். 1770-1974 வரை மொத்தம் 25 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. தவனையாக லஞ்சம் வாங்கியுள்ளனர். முரசொலி கட்டிடத்துக்கு, மேலும் பல விஷயத்துக்காகவும் கமிஷன் வாங்கியுள்ளனர். இதெல்லாம் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு. சத்யநாராயணா பிரதர்ஸ்க்கு டெண்டர் கொடுப்பதற்காக கருணாநிதி தனது முதல்-அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளார்.

இதெல்லாம் சொன்னால் ஓடிவிடுவார்கள். ஆதாரங்கள் கேட்டால் இங்குள்ள நூலகத்தில் உள்ளது. அங்கு போய் பாருங்கள். ஆதாரத்தை பக்கத்துலேயே வைத்துக்கொண்டு பிறரிடத்தில் தேடுகின்றனர். ஆதாரம் பக்கத்திலேயே உள்ளது.

கட்சி நிதி

கட்சி நிதி குறித்து தி.மு.க.வின் ஊழல் குறித்து அமலாக்கத்துறை கூறியுள்ளது. 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை கட்சி நிதி வாங்கியுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. அதன் ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அந்த துறைக்கு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை தவறாகபயன்படுத்தியுள்ளார். எவ்வளவு பெரிய சாதனை. அதுதான் தி.மு.க.

டாஸ்மாக்கை கையில் வைத்திருந்த அமைச்சருடன் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இதில் சிக்கியுள்ளனர். செந்தில் பாலாஜியின் சகோதரர் குறித்தும் அமலாக்கத்துறை சொல்லியுள்ளது. பார்ட்டி பண்ட்(கட்சி நிதி) வாங்கியதில் முக்கிய நபர்கள் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என அமலாக்கத்துறை கூறியுள்ளது.

தி.மு.க. இருக்குமிடத்தில் ஊழல் இருக்காது என அவர்கள் கூறுகின்றனர். நான் கூறுகிறேன். தி.மு.க. இருக்குமிடத்தில் ஊழல்கள் இருக்கும். ஊழல்கள் இருக்குமிடத்தில் தி.மு.க. இருக்கும்.

ஆதாரம் போதுமா?

ஆதாரம் வேண்டும் என்றீர்களே.. போதுமா.. 2 வகை உள்ளது. தவறு செய்து மாட்டிக்கொள்வதற்கள் ஒரு பக்கம். தவறு செய்து, செய்யாதபடி சரியாக செய்பவர்கள் இன்னொரு பக்கம். அதில் தி.மு.க. 2 வது பக்கம். ஊழல் என்று சொன்னாலே தி.மு.க.வினர் எழுந்திரிப்பார்கள். ஊழல் செய்யவில்லை என்று அவர்களால் கூற முடியுமா?

மிசாவை பார்த்தவர்கள், மிசாவை பார்த்தவர்கள் என்று சொல்கிறார்கள். மிசாவை பற்றிய வரலாறு எனக்கும் தெரியும். சட்டம், ஒழுங்கு பற்றி பேசுவதற்கு முன் உங்கள் ஆட்சியில் நடந்ததை கண்ணாடியில் பார்ப்பது நல்லது.

இறைவன் நமது பக்கம்

அண்ணா, எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., விஜய். இயற்கையும், இறைவனும் நமது பக்கம்தான் இருப்பார்கள். அன்புக்கு முன்னாடி அவர்கள் தோற்பது உறுதி. நாற்காலிக்காக அதிகாரத்திற்காக நான் இங்கு வரவில்லை, மக்களுக்கு நல்லது செய்யவும், நன்றி கடன் செய்யவும் மட்டுமே வந்துள்ளேன்.

பதிலுரை நிறைவு

சட்டமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்டுள்ள 22-ம் எண் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான தீர்மானங்களை நான் படித்துப் பார்த்தேன். அவை விதிகளுக்கு உட்பட்டவையாகவும், அரசின் நிதி நிலைக்கு ஏற்ப செயல்படுத்தக் கூடியவையாகவும் இருக்கும் பட்சத்தில், அரசு அதனை கனிவுடன் பரிசீலிக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே உறுப்பினர்கள் எனது பதிலுரையில் கூறிய விளக்கத்தை ஏற்றுக் கொண்டு தங்கள் வெட்டுத் தீர்மானங்களை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், இந்த மானியக் கோரிக்கைகளை பேரவை தலைவர் நிறைவேற்றித் தர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப்படைகள் சிறப்பாக செயல்பட எனக்கு உறுதுணையாக இருந்து வரும் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை பெருநகர் காவல் ஆணையர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர், அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்து காவல்துறை சகோதர, சகோதரிகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் பேசினார்.

கடும் அமளி

முதல்-அமைச்சர் தனது பதிலுரையை வழங்கிக் கொண்டிருக்கும்போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் எழுந்து நின்று முதல்-அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு பேச அனுமதி வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனால் சட்டமன்றத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. கடும் அமளிக்கு இடையே காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கைகள் மீதான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.

சபாநாயகர் கண்டனம்

தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குரல் கொடுத்து வந்த நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அவர்களை கண்டித்தார். இது குறித்து அவர் கூறியதாவது;-

“முதல்-அமைச்சர் விஜய் பதில் சொல்ல மாட்டேன் என்கிறாரே, அவர் எப்போது பதில் சொல்வார் என்றெல்லாம் கேட்டார்கள். முதல்-அமைச்சரின் பதிலுரை திங்கட்கிழமை இருக்கிறது என்று சொன்னேன். அதன்படி முதல்-அமைச்சர் இன்று தனது பதிலுரையை வழங்கியபோது பல ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மக்கள் மன்றத்தின் முன்பாக முதல்-அமைச்சரின் பதிலுரை முழுமையாக நேரலை செய்யப்படும்போது, என்னுடைய அனுமதி இல்லாமல் போஸ்டர்களை கொண்டு வந்து இங்கே காட்டுவதும், குரல் கொடுப்பதும் சரியல்ல. உங்கள் நோக்கம் அவரது பேச்சு வெளியே போகாமல் தடுக்க வேண்டும் என்பதாக இருந்திருந்தால், அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. நீங்கள் அலுத்துப் போகும் வரை குரல் கொடுத்தீர்கள், ஆனால் முதல்-அமைச்சர் தனது பேச்சை முழுமையாக நிறைவு செய்துள்ளார்.

முதல்-அமைச்சர் எப்போது பேசுவார் என்று கேட்ட நீங்கள், அவர் பதிலளிக்கும்போது அமைதியாக கேட்டிருக்க வேண்டும். உங்கள் விளக்கத்தை நீங்கள் அளிப்பதற்கான வாய்ப்புகள் எல்லாம் இருந்தன. ஆனால் அந்த வாய்ப்புகளை நீங்கள் இழந்துவிட்டீர்கள். இந்த அவையில் முதல்-அமைச்சர் பேசும்போது ஆரம்பத்தில் இருந்து கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தியது தவறு. உங்கள் போஸ்டர்களை கொண்டு வந்து காட்டுகின்ற இடம் அல்ல இது. இதை வன்மையாக கண்டிக்கின்றேன். முதல்-அமைச்சரின் பதிலுரை நிறைவடைந்துவிட்டது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com