

சென்னை,
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சியை நேற்று முன்தினம் நடத்தினார். இந்த நிகழ்ச்சி, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தனியார் நிறுவனம் 'பார்க்கிங்' வசதி, இருக்கை வசதிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என்று ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். 'டிக்கெட்' இருந்தும் இருக்கைகள் இல்லாததால், நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் பல ரசிகர்கள் பணம் விரயம் என்று மனக்குறையுடன் திரும்பிச் சென்றனர்.
இந்த நிலையில், இருக்கைகளின் எண்ணிக்கையைவிட அதிகளவில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும், 'பார்க்கிங்' வசதி முறையாக இல்லாததுதான் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
வடநெம்மேலியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகனமும் இந்த நெரிசலில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடம் தாம்பரம் போலீஸ் கமிஷனரக எல்லைக்குள் வருகிறது. எனவே இந்த குளறுபடி தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜூக்கு தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்தார்.
அந்த உத்தரவில், 'போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிகமான கூட்டத்துக்கான காரணங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், மருத்துவ வசதிகள், நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் நிகழ்ச்சி தொடர்பாக செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து விசாரணை செய்ய வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படாத வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விசாரிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
டி.ஜி.பி. சங்கர் ஜிவாலின் உத்தரவை தொடர்ந்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் இசை நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை உடனடியாக நேற்று பார்வையிட்டு விசாரணையை தொடங்கினார்.
டிக்கெட் நகலை அனுப்ப சொன்ன ஏ.ஆர்.ரகுமான்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அன்பான சென்னை மக்களே, இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட்டை வாங்கிவிட்டு துரதிருஷ்டவசமாக உள்ளே செல்ல முடியாமல் திரும்பி சென்றவர்கள் தயவு செய்து டிக்கெட் நகலை அனுப்பி வையுங்கள். எங்கள் குழுவினர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள்'' என தெரிவித்து உள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட மற்றொரு பதிவில் "என்னை சிலர் ஆடு என்று அழைக்கிறார்கள். மக்கள் விழிப்புணர்வு பெற இந்த முறை நான் பலி ஆடு ஆகிறேன். சென்னையில் உலக தர கட்டமைப்பு சுற்றுலா மேம்பாடு உள்ளிட்டவை சிறந்து விளங்க வாய்ப்புகளை வழங்க வேண்டும். போக்குவரத்து, கூட்ட நெரிசல் இல்லாத வகையில் விதிகளை பின்பற்றும் ரசிகர்கள் அமைய வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். சென்னையில் கலாசார மறுமலர்ச்சி ஏற்பட்டு, தகுதி வாய்ந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு திறமைகள் பளிச்சிட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.