ஹெலிகாப்டர் விபத்து - 13 ஆம்புலன்ஸ்களில் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்படும் உடல்கள்...

குன்னூர் அருகே மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி உள்பட 13 பேர் பலியானார்கள்.
ஹெலிகாப்டர் விபத்து - 13 ஆம்புலன்ஸ்களில் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்படும் உடல்கள்...
Published on

குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங், 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்து வருகின்றனர்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மற்றும் ராணுவ வீரர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்கு பின்னர் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் வெலிங்டன் மைதானத்திற்கு இன்று கொண்டுவரப்பட்டன. இதையடுத்து வெலிங்டன் மைதானத்தில் உடல்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன.

பிபின் ராவத் உள்ளிட்ட உயிரிழந்த வீரர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். துக்கத்தை அனுசரிக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு துண்டு அணிந்த படி ராணுவ அதிகாரிகள் உடலுக்கு வீர வணக்கம் செலுத்தினார். தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, காவல்துறை உயர் அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில்,வெலிங்டன் ராணுவ சதுக்கத்தில் வைக்கப்பட்ட முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்ட நிகழ்வு முடிந்து, 13 பேரின் உடல்களும் 13 ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்பட்டு சூலூர் விமானப்படை தளத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.இதில் வழியெங்கும் பொதுமக்கள் சாலைகளின் இரு ஓரமும் நின்று தங்களது இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து,இன்று மாலை சூலூர் சென்றடைந்த பின்னர், முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் இன்று ராணுவ விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும்,அவர்களது உடல் நாளை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com