ஹெல்மெட் கட்டாயம்: கடைகளை நோக்கி படையெடுக்கும் மக்கள்...!

சென்னையில் ஹெல்மெட் கடைகளை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
ஹெல்மெட் கட்டாயம்: கடைகளை நோக்கி படையெடுக்கும் மக்கள்...!
Published on

சென்னை,

சென்னையில் சாலை விபத்துகளில் ஏற்படும் மரணங்கள் தொடர்பாக மாநகர போக்குவரத்து போலீசார் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வுகளில் ஹெல்மெட் அணியாத பலரும் மரணிப்பது தெரியவந்தது. கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை சென்னையில் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் 98 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிச்சென்ற 714 பேரும், பின்னால் அமர்ந்து சென்ற 127 பேரும் காயம் அடைந்து இருக்கின்றனர் என்கின்றனர் போலீசார்.

இதனையடுத்தே இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்போரும் ஹெல்மெட் கட்டாயம் என்பது நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இது இன்று காலை முதல் சென்னை மாநகரில் அமலுக்கு வந்துள்ளது.

மேலும் சென்னை நகரில் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க சிறப்பு தணிக்கை மேற்கெள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 312 போக்குவரத்து சந்திப்புகளிலும் இது தொடர்பாக அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு அந்த இடத்திலேயே அபராதங்களும் விதிக்கப்படுகின்றன.

இந்தநிலையில், தமிழகம் முழுவதும் ஹெல்மெட் விற்பனை சக்கை போடு போட்டு வருகிறது. இன்று முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதால், வாகன ஓட்டிகள் பலர் ஹெல்மெட் கடைகளை நோக்கி படையெடுது வருகின்றனர். மக்களின் நிலையை பயன்படுத்தி கொண்ட கடைக்காரர்கள், மூன்று மடங்கு கூடுதல் விலை வைத்து ஹெல்மெட்டுகளை விற்பனை செய்வதாக வாகன ஓட்டிகள் குமுறுகின்றனர்.

இதுதவிர ஐ.எஸ்.ஐ., தரமில்லாத ஹெல்மெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டதாகவும் வாகன ஓட்டிகள், போலீசாருக்கு கப்பம் கட்டுவதை விட, தரமில்லாத ஹெல்மெட்டுகளை வாங்கி செல்வோம் என்ற நினைப்பில், 500 ரூபாய் கூட பெறாத ஹெல்மெட்டுகளை, 1,000 முதல் 1,500 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கிச் சென்றதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். ஹெல்மெட் விற்பனை 60 முதல் 75 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com